நெருங்குகிறது நவராத்திரி: பொம்மை விற்பனை படுஜோர்; கொலு வைக்க தயாராகும் இல்லத்தரசிகள்…

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவராத்திரி பண்டிகை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதை ஒட்டி சென்னையில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைப்படைந்துள்ளது.

மயிலாப்பூர் மாடவீதிகளில் குவிந்துள்ள பொம்மைகளை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் வாங்கிச்செல்கின்றனர்.

சின்னச் சின்ன பீங்கான் மண் பொம்மைகள் முதல் மிகப்பெரிய சுடுமண் பொம்மைகள் வரை அணிவகுத்து நிற்பது கண்ணிற்கு இனிய காட்சியாக இருக்கிறது. நவராத்திரியன்று கொலு வைப்பதன் ஐதீகம்... வீடுதோறும் கேட்கும் பஜனைப் பாடல்கள், அந்த வீடுகளில் கொடுக்கப்படும் சுவையான சுண்டல்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன்.

சந்தோச பண்டிகை

சந்தோச பண்டிகை

நவராத்திரி என்பது 10 நாள் பண்டிகை சிவனுக்கு உகந்த ஒரு ராத்திரி, சிவராத்திரி. சக்திக்கு உகந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.

புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாகும்.

வீடுகளில் பிரம்மோற்சவம்

வீடுகளில் பிரம்மோற்சவம்

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார் என்கின்றன புராணங்கள். இதனை கொண்டாடும் விதமாக வீடுகளில் கொலுவைத்து 10 நாட்கள் தொடர்ச்சியாக அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. எனவே நவராத்திரி விழாவை வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.

முப்பெரும் தேவியர் வழிபாடு

முப்பெரும் தேவியர் வழிபாடு

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உலகில் உள்ள இந்து மக்கள் ஆகியோரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

வீடுகளில் கொலு

வீடுகளில் கொலு

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

வேண்டியது கிடைக்கும்

வேண்டியது கிடைக்கும்

நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதத்தை இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள். இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது.

பெண்களின் பண்டிகை

பெண்களின் பண்டிகை

இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

மாடவீதிகளில் உற்சாகம்

மாடவீதிகளில் உற்சாகம்

நவராத்திரிப் பண்டிகை அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளதை அடுத்து சென்னை மயிலாப்பூர் மாட வீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

அம்மன், விஷ்ணு, பள்ளிகொண்ட பெருமாள் என அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பொம்மைகளை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உற்சாகத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

கண்ணைக் கவரும் பொம்மைகள்

கண்ணைக் கவரும் பொம்மைகள்

நவராத்திரி விழாவையொட்டி, திருச்சியில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில், கொலு பொம்மைகள் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. கைவினைக்கலைஞர்களின் கற்பனை திறத்தில், காகிதக்கூழ், பளிங்கு கற்கள், மாக்கல் போன்ற பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தசாவதாரம்

தசாவதாரம்

இதேபோல், தஞ்சாவூரில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்திலும் தொடங்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் கண்காட்சியில், ராமாயணக் கதையை விளக்கும் பொம்மைகள், தசாவதாரம், அஷ்டலட்சுமி, கல்யாண செட் உள்ளிட்ட பலதரப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்சமாக நூறு முதல் அதிகபட்சமாக பல ஆயிரம் ரூபாய் வரை கொலு பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது, பொதுமக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

அம்மனின் அருள்

அம்மனின் அருள்

கொலு வைத்து அம்மனை வழிபடும் பெண்கள் அக்கம் பக்கத்தவர்களையும் உறவினர்களையும் அழைத்து பஜனைகள் பாடி, தாம்பூலப்பை கொடுத்து, சுண்டல், பொங்கல் என அம்மனுக்கு படைத்த பிரசாதங்களை கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் கொலு வைப்பவர்களுக்கும், கொலுவை பார்வையிட வந்தவர்களுக்கும் அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+