விஜயதசமிக்கு பழனி போறீங்களா?.. இதை நோட் பண்ணிக்கோங்க.. சுவாமி தரிசனத்துக்கு புதிய கட்டுப்பாடு
உடுமலை: நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமியன்று பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக பழனி முருகன் கோயில் உள்ளது. பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும். இந்தக் கோயிலில் முருகனின் சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த பழனி கோயில் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களுக்கு மிகவும் நெருக்கமான கோயில் ஆகும். குடும்பத்தில் எந்தவொரு விசேஷமானாலும் பழனி முருகனின் ஆசிர்வாதம் பெற்று நடைபெற வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்ட மக்களாக உள்ளனர்.

தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்ட மக்களும் பழனி முருகன் கோயிலுக்கு அடிக்கடி சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களும் பழனிக்கு வந்து செல்கின்றனர். வெளிநாட்டு முருக பக்தர்களும் அதிக அளவில் தரிசனம் செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோயிலுக்கு பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பழனி கோயிலில் அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
விழாவையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், நவராத்திரி விழாவையொட்டி அம்பு போடுதல் நிகழ்ச்சி அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று நடைபெறுவதால் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.
எனவே, மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications