பாஜக தலைமையில் அமைந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி: ஸ்டாலின் சாடல்
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி உருவாகி இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைக்காட்சிக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் மத்தியில் மதச்சார்பற்ற அரசு உருவாக வேண்டும் என்பதுதான் முதன்மையானது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான மக்கள் விரோத அரசுக்கு பாடம்புகட்டும் வகையில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்பதுதான் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் காண முடிகிறது.

சந்தர்ப்பவாத கூட்டணி
தமிழகத்தில் பாரதிய ஜனதாவோடு கூட்டு சேர்ந்திருக்கிற கட்சிகளைப் பார்க்கும் போது அது சந்தர்ப்பவாத கூட்டணி என்பதுதான் தெரிகிறது.

சேது நாயகன் வைகோ
உதாரணத்துக்கு சேது சமுத்திர திட்டம் வரவேண்டும் என்று ஆதரித்த கட்சிகள் குறிப்பாக மதிமுக, பொதுச்செயலர் வைகோ, சேது சமுத்திர திட்டத்து நாயகனாக அதன் அடிக்கல் நாட்டுவிழாவில் பேசப்பட்டவர்.

ராமதாஸ், விஜயகாந்த்
அதேபோல் சேது சமுத்திரத்திட்டத்துக்கு குரல் கொடுத்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதேபோல் சேது சமுத்திரத்தை வரவேற்றவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சேதுவுக்கு எதிரான பாஜக
ஆனால் சேது திட்டத்தை முடக்குவதற்கு உச்சநிதிமன்றத்தில் தடை கோரிய பாரதிய ஜனதாவினருடன் தான் இவர்கள் இன்று கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றால் அது சந்தர்ப்பவாத கூட்டணிதானே..

காங்கிரசின் பலவீனம்
லோக்சபா தேர்தலில் சில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போட்டியிடாதது என்பது அந்த கட்சியின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.

ஜெ. சொல்வதா?
ஸ்பெக்ட்ரம் மற்றும் ஏர்செல் வழக்கில் தொடர்புடைய ராஜாவுக்கும் தயாநிதி மாறனுக்கும் சீட் கொடுத்திருப்பதாக ஜெயலலிதா சொல்லுகிறார்.. வேறு யாராவது சொன்னாலும் பரவாயில்லை.

பதவி விலகியவர்கள்..
பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கு, சென்னை வருமான வரி வழக்கு என வழக்குகளை எதிர்கொண்டிருக்கிற ஜெயலலிதா இதை சொல்லக் கூடாது. அத்துடன் தயாநிதியும் ராஜாவும் அவர்கள் மீதான புகாரில் உண்மை இருக்கிறதோ இல்லையோ பொறுப்புகளில் இருந்து விலகி அந்த வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

வாய்தா வாங்குகிற ஜெ.
ஆனால் ஜெயலலிதாவோ வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு மனு போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் ஜெயலலிதா அதைப் பற்றி பேசக் கூடாது.

சட்டசபை தேர்தலுக்கு அச்சாரம்
தற்போது நடைபெறும் லோக்சபா தேர்தலானது 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னோடியாக ஒரு அச்சாரமான தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Click it and Unblock the Notifications
