உயிரோடு கொளுத்தப்பட்ட கண்டக்டர் இன்று உயிரிழப்பு –குற்றவாளிகள் கைது
நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள அழகநேரியை சேர்ந்தவர் செல்வா. இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்த தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 20 ஆம் தேதி இவரது பஸ் கங்கைகொண்டான் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது.அப்போது 4 வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்ததால் கண்டக்டர் செல்வாவுக்கும், 4 வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே நடு வழியில் அவர்களை கண்டக்டர் இறக்கி விட்டார். இதனால் கண்டக்டர் செல்வா மீது அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் 4 வாலிபர்களும் பெட்ரோல் பாட்டிலுடன் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த கண்டக்டர் செல்வாவை 4 பேரும் அவதூறாக பேசி பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த கண்டக்டர் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு போராடிய செல்வாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.எனினும் இன்று மதியம் 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த பெத்தபெருமாள், அப்பாத்துரை , புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டுடன் காட்டை சேர்ந்த வேல்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கண்டக்டர் செல்வா உயிரிழந்ததால் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications