புதுச்சேரி முதல்வராகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி!காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில புதிய முதல்வராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 16ம் தேதி புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-திமுக அதிகப்படியாக 17 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக புதுச்சேரியில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

மேலிட பார்வையாளர்களாக, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், புதிய முதல்வராக நாராயணசாமியை தேர்ந்தெடுத்தனர். முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த நமச்சிவாயம் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர், நாராயணசாமியை முன்மொழிந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், நமச்சிவாயம் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் ஆங்காங்கு போராட்டங்களில் குதித்துள்ளனர்.
பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. மேலிடத்திடம் கலந்து பேசி பதவியேற்பு விழாவுக்கு நாள் குறிக்கப்படும் என்று புதுச்சேரி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. முதல்வராக பதவி வகிக்க வேண்டுமானால் அவர் எம்எல்ஏவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, 6 மாதங்களுக்குள் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வசதியாக, ஏற்கனவே வென்ற ஏதாவது ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும். ஒருவேளை இடைத்தேர்தலில் நாராயணசாமி தோற்றால் நிலைமை சிக்கலாகும். இதனால் புதுச்சேரி அரசியல் களை கட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications