புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு: தவறுகள் அதிகம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடி: புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் தவறு உள்ளிட்ட பல தகவல்கள் தவறாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், தொகுதி மாற்றம் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்து புதிதாக வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு முகவரி சரியாக இருந்தும் பெயர் மாறியுள்ளதால் அவர்கள் பதட்டத்தில் உள்ளனர்.
மேலும் ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் பெயர் உள்ளது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ராஜீவ் நகரை சேர்ந்த சில்வஸ்டர் என்பவருக்கு 1,2,3 என ஒரே வரிசையில், ஒரே எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று எண்ணிலும் வாக்காளர் பெயர், முகவரி என அனைத்தும் ஒன்றாக உள்ளது. இதுபோல் பல பகுதிகளிலும் பல வாக்காளர்களுக்கு பெயர், முகவரி, வரிசை எண் என ஏகப்பட்ட குளறுபடிகளால் திணறி போய் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டாலும் ஆண்டுதோறும் குளறுபடிகள் தொடர்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது போன்ற தவறுகள் தொடர்வதால் பலர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிலர் வேறு வாக்கு சாவடிகளுக்கு போய் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் பெயர் தவறுகளை திருத்திய சில வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போன அதிசயமும் நடந்துள்ளது. இத்தகைய தவறுகளால் பொதுமக்கள் நொந்து நூலாகிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படி குளறுபடிகள் நடந்தால் எப்படி வாக்களிப்பது என பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications