காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என வாக்குறுதி தர முடியாது - நிர்மலா சீதாராமன்
அனைத்து மாநில அரசுகளிடமும் ஆலோசித்த பின்னர் காவிரி வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என வாக்குறுதி தர முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியளித்த பிறகும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இன்னும் சில போராட்டங்கள் நடத்த சில அமைப்பினர் முடிவும் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை என்றும் நதி நீர் பங்கீட்டுக்கான ஸ்கீமை உருவாக்க வேண்டும் என்றுதான் தீர்ப்பு கூறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

ஆளுநர் சந்திப்பு
மேலும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே தமிழக அரசுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சருடன் சந்திப்பு
அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்றும் வாரியம் அமைக்கப்படும் என்றே ஆளுநர் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்தித்திருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம்
இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஆய்வு செய்ய செல்லும் வழியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றத்தில் செல்வோம். நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வகையில் வாரியம் அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு செய்ய முடியாது
காவிரி விவகாரத்தில் தன்னிச்சையாக மத்திய அரசு எதையும் செய்திட முடியாது. எனவே மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். உடனடியாக காவிரி வாரியம் அமைப்போம் என்று எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது. அதற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்றதல்ல. எல்லா மாநில அரசுகளுடனும் நாங்கள் ஆலோசனை செய்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications