For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில்கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழில் கல்விக் கூடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு ஒன்றும் தேவையில்லை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக இன்று செய்தி வந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

No need to conduct CET for MBBS and other courses: Karunanidhi

குறிப்பாகத் தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படியே தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கிராமப்புற மற்றும் ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவுமிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தி.மு.க. ஆட்சிக் காலத்தில், டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வியாளர் குழுவின் பரிந்துரையினை ஏற்று, 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.), வெளியிட்ட அறிவிப்பினை உச்சநீதிமன்றமே 18-7-2013 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னர் செய்திருந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அப்போதே சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் இருவர், பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறிவிட்டதால், அந்தத் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக அமைந்துள்ளது. மருத்துவக் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. நாடு தழுவிய நுழைவுத்தேர்வு என்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை தி.மு.க. ஆட்சியின் போதே ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007-08-ம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது.

இது தொடரப்பட வேண்டும் என்று நான் முதல்வராக இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரிக்கும் 15-8-2010-ல் கடிதம் எழுதினேன். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழக அரசு இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மேல்நிலைக்கல்வி தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் 2011-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அன்று தி.மு.க. அரசால் பெறப்பட்டது.

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதுதான் வழக்கு நடைபெற்று, உச்சநீதிமன்றம் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை ஏற்கனவே வழங்கியுள்ளது.

கிராமப்புற மாணவர்களின் நலனையும், பிற்படுத்தப்பட்ட-மிகப் பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை, ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழை, எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்தது தி.மு.க. ஆட்சி.

அதன் காரணமாகக் கல்வி நிலையிலும், சமூக மற்றும் பொருளாதார நிலைகளிலும் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுமுறை; மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. மேலும், தமிழக அரசு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நலன்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே இந்த நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி, கிராமப்புற ஏழை - எளிய மாணவர்களின் வாழ்விலும், முன்னேற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற செய்தியாகும். எனவே மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை ஏற்று, மீண்டும் ஒரு வீண் வம்பை ஏற்படுத்திக் கொள்ளாமல், நுழைவுத் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே விளக்கமாக அளித்துள்ள தீர்ப்பிற்கு மாறாக வேறு முடிவெதையும் எடுக்காமல், பொது நுழைவுத்தேர்வு சம்பந்தமாகத் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நெறிமுறைகளே தொடர்வதற்கான வழிவகைகளைச் செய்திட முன் வரவேண்டும்.

மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழில் கல்விக் கூடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பதே நிரந்தர முடிவாக இருக்க வேண்டும். எனவே மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi said in a statement that there is no need to conduct common entrance test for MBBS and other courses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X