ஜெ.வுக்காக தேமுதிகவுடன் மல்லுக்கட்டும் பாஜக.... குழப்பத்தில் விஜயகாந்த்.... காத்திருக்கும் திமுக
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்ற முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தை செயல்படுத்துவதில் பாஜக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் எந்த கட்சியோடு கூட்டணி சேருவது என்பது குறித்து இறுதி முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் திணறி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து தேமுதிகவும் அந்த அணியில் ஐக்கியமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக அணிக்கு தேமுதிக தாவிவிடக் கூடாது என்பதில் பாஜக முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறது.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் தமிழக தேர்தல் களத்தில் அது திமுக- அதிமுகவுக்கு மாற்று என முழக்கத்தை முன் வைத்தாலும் அது எப்படியும் பிடிக்கப் போவது 5-வது அல்லது 6-வது இடம்தான்... இதுதான் யதார்த்தம்.. வெறும் 2%க்கும் குறைவாக உள்ள ஒரு கட்சி, 6% வாக்கு உள்ள தேமுதிகவை என்னதான் வளைத்துப் போட்டாலும் அதிகபட்சம் 5வது இடத்துக்குத்தான் முன்னேற முடியுமே தவிர... ஆட்சி அமைப்பது என்பது கனவிலும் நடக்காத ஒன்றுதான்..

ஜெ. போட்ட ப்ளான்
இந்த யதார்த்தங்களுக்கு அப்பால், தேமுதிகவை வளைத்துப் போடுவதில் விடாப்பிடியாக பாஜக இருப்பதற்கு காரணமே அதிமுகதான். ஆம் ஜெயலலிதாவின் திட்டத்தை செயல்படுத்தவே தேமுதிகவுடன் இப்படி மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது பாஜக.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைந்தால் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள்... ஆகையால் இந்த கூட்டணி உருவாகாமல் இருப்பதற்காக அனைத்து காய்நகர்த்தல்களையும் தொடக்கம் முதலே செய்து வருகிறார் ஜெயலலிதா. அவரது இந்த திட்டத்தை செயல்படுத்துகிற வேலையை கச்சிதமாக செய்து வருகிறது பாஜக.

மரியாதை நிமித்தம்தான்...
இத்தனைக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வந்து சந்தித்ததைக் கூட ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே பார்ப்பதாக கை கழுவும் தொனியில் தேமுதிக கருத்து தெரிவித்திருக்கிறது. ஆனால் 'வந்தே' ஆக வேண்டும் என வறட்டுப் பிடிவாதத்துடன் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

குழப்பத்தில் விஜயகாந்த்
இதனால் என்னதான் செய்வது என்ற குழம்பிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் விஜயகாந்த். திமுகவோ, கேட்ட தொகுதிகளைக் கொடுக்க மறுக்கிறது; ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர விரும்பவில்லை; ஆனால் திமுகவை நம்பி பாஜகவை கழற்றிவிட்டால் நாளை அதிமுகவைப் போல தனது கட்சியை உடைத்தால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நம்மை காப்பாற்றாதே என்ற கவலை விஜய்காந்துக்கு.

பாஜகவை கழற்றிவிட்டால்...
மக்கள் நலக் கூட்டணிக்கு போனால் முதல்வர் வேட்பாளர் நாம்தான்... ஆனால் அந்த கூட்டணியால் சில இடங்களைக் கூட கைப்பற்ற முடியாதே என்கிற கவலை..... பாஜகவுடன் சேர்ந்தால் உள்ளதும் போச்சுடா நிலைமை வந்துவிடும்... ஜெயலலிதாவும் ஜெயித்துவிடுவார் என்னதான் செய்வது? என்ற குழப்பத்தில்தான் இருக்கிறார் விஜயகாந்த். இதைத்தான் தொடக்கம் முதலே ஜெயலலிதாவும் எதிர்பார்த்து வந்தார். பாஜகவும் அதனை தொடர்ந்து செய்து வந்தது.

முதலில் திமுக.. அடுத்து அதிமுக
இப்படி செய்வதன் மூலம் பாஜகவுக்கு என்ன ஆதாயம்? தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை அடுத்தடுத்து பலவீனப்படுத்தி 2021 தேர்தலில் குறைந்தபட்சம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதுதான் பாஜகவின் திட்டம். இதன் முதல்படியாக 2016 தேர்தலில் திமுகவை எப்படியும் ஜெயிக்கவிடாமல் தடுப்பது.... அப்படி செய்துவிட்டால் திமுகவின் அதிகாரக் கனவு தகர்ந்துவிடும்... அந்த கட்சி இயல்பாகவே பலவீனப்பட்டுவிடும்; அந்த இடத்தை நோக்கி பாஜகவை நகர்த்துவது என்பதுதான். திமுகவை பலவீனப்படுத்திய பிறகு அதிமுகவை பலவீனப்படுத்தும் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்பதும் பாஜகவின் திட்டம்.
ஆக சட்டசபை தேர்தல் களத்தில் தற்போது போட்டியில் இருப்பது அதிமுக-பாஜகவின் ராஜதந்திரமா? திமுக- தேமுதிகவின் வியூகமா? காத்திருப்போம்












Click it and Unblock the Notifications