ஒரு வேளை.. தீர்ப்பு ஓபிஎஸ்க்கு எதிராக வந்திருந்தால்?
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஓபிஎஸ்க்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது.
Recommended Video

சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஓபிஎஸ்க்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்.

எதிராக வாக்கு
அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தினகரன் ஆதரவாளர்கள்
இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

சபாநாயகர் உத்தரவு
இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

பதவியில் நீடிக்கலாம்
இந்நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 11 பேரும் பதவியில் நீடிக்கலாம் என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கி சென்னை ஹைகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சட்டசபையில் பலம் 216
தமிழக சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை
234ஆகும். இதில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் தமிழக சட்டசபையில் தற்போது பலம் 216ஆக உள்ளது.

ஒருவேலை பறிக்கப்பட்டிருந்தால்
இந்நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் பதவி ஒருவேலை பறிக்கப்பட்டிருந்தால் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 206ஆக இருந்திருக்கும். எடப்பாடி அரசுக்கான பலம் தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி 111 ஆகும். 11 பேரின் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டிருந்தால், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 100ஆக குறைந்திருக்கும்.

ஆட்சிக்கு ஆபத்தில்லை
தனியரசு உட்பட 3 பேரின் ஆதரவால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கான பெரும்பான்மை 103ஆகவே இருந்திருக்கும். அரசுக்கு தேவையான பெரும்பான்மை இருப்பதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல்தான் இருந்திருக்கும். ஆனால் இது எதற்கும் வேலையில்லாமல் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரும் பதவியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டு ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications