ஐடி ரிட்டர்ன் வழக்கு.. ஜெ., சசி கோர்ட்டில் ஆஜராகவில்லை - மேலும் 4 மாத காலம் அவகாசம் கேட்கிறார்!
சென்னை: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் சென்னை கோர்ட் உத்தரவிட்டும், இன்று முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கோர்ட்டுக்கு இன்று வரவில்லை. மாறாக வழக்கை ஒத்திவைக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா சார்பில் மனு செய்யப்பட்டது.
இதை இன்று பிற்பகல் விசாரித்து உத்தரவு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்த வழக்கை நான்கு மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அதை மேலும் 4 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரியும் உசச்நீதிமன்றத்தில் ஒரு மனுவும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991-92, 1992-93 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை மூன்று வாரம் ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்திலும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இது தொடர்பாக பிற்பகல் 12 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
உசச்நீதிமன்றத்தில் ஒரு மனு
அதேசமயம், உச்சநீதிமன்றத்திலும் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யபப்பட்டது. அதில், விசாரணைக் கால அவகாசத்தை மேலும் 4 மாத காலம் நீட்டிக்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான இந்த வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் இழுபறி தொடருவது குறிப்பிடத்தக்கது.
வழக்கு என்ன...?
1991ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்பது புகார். மேலும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனமும், வருமான வரி செலுத்தவில்லை எனவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், வழக்கை, கீழ் நீதிமன்றம் 4 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications