ஜெ.வை போல ஓபிஎஸ் அதிரடி- போயஸுக்கும் போவதும் இல்லை- மன்னார்குடி கேங் ஷாக்!
ஜெயலலிதாவைப் போல அதிரடியாக திடமான நடவடிக்கைகளை முதல்வர் ஓபிஎஸ் மேற்கொள்வதால் மன்னார்குடி கோஷ்டி அதிர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது அதிரடி நடவடிக்கைகளால் மறைந்த ஜெயலலிதாவை போல திடமானவராக உருமாறிக் கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி.
மத்திய அரசின் ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வம் அமர்ந்தாலும் மன்னார்குடி கோஷ்டியின் நெருக்கடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தொடக்கத்தில் மன்னார்குடி கோஷ்டிக்கு பணிந்துதான் போய்க் கொண்டிருந்தார்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றபோது அவரது காலில் விழுந்து அதிரவைத்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் பன்னீர்செல்வத்தின் அதீத பணிவை மத்திய அரசு சகிக்கவில்லை.

டெல்லி உத்தரவாதம்
அண்மையில் டெல்லி சென்ற போது, நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வர்; எதற்காக சசிகலா உறவினர்களிடம் பயப்படுகிறீர்கள்? நாங்கள் இருக்கிறோம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்துதான் தம்மை ஒரு வலிமையான முதல்வராக உருமாற்றி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

போயஸ் போவதில்லை
டெல்லியில் இருந்து திரும்பியபோது போயஸ் கார்டன் பக்கம் போய்விட்டு வந்தார். ஆனால் அதன்பின்னர் அந்த பக்கமே முதல்வர் ஓபிஎஸ் எட்டிப்பார்க்கவில்லை.

மனைவியுடன் நிகழ்ச்சியில்
அத்துடன் தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மனைவியுடன் குடியரசு தின நிகழ்ச்சிக்கு மேடையேறினார் முதல்வர் ஓபிஎஸ். முதல்வராக கருணாநிதி இருந்தபோது கூட விவிஐபி பகுதியில்தான் அவரது குடும்பத்தினர் அமர்ந்திருப்பர். ஆனால் மன்னார்குடி கோஷ்டியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செயல்பட தொடங்கினார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

ஜெ. இருக்கையில்
சட்டசபையில் ஆளுநர் உரையின் போது ஜெயலலிதாவின் இருக்கையில் முதல்வர் ஓபிஎஸ் அமர்ந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள். அதேபோல் பொதுவாக வெளியூர்களில் சர்கியூட் ஹவுஸில்தான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தங்குவது வழக்கம்.

ஜெ. பாணியில்
இந்த முறை மதுரை சென்றபோது ஜெயலலிதாவுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதை தமக்கு செய்ய வேண்டும் என கண்டிப்பான உத்தரவு போட்டார் முதல்வர் ஓபிஎஸ். இதனால் அவருக்கு மதுரை பாண்டியன் ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டன. அத்துடன் முதல்வர் தங்கிய அறை இருக்கும் மாடிப் பகுதி முழுவதும் புக் செய்யப்பட்டிருந்தது.

போலீஸ் பாதுகாப்பு
பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஓபிஎஸ். அப்போது சென்னை விமான நிலையம் முதல் கிரீன்வேஸ் சாலை வரை இதுவரை இல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு அவருக்காக போடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியில் மன்னார்குடி கோஷ்டி
ஒருபக்கம் நடை, உடை, சிகை அலங்காரத்துடன் ஜெயலலிதாவைப் போல உருவெடுக்க சசிகலா முயற்சிக்கிறார். ஆனால் செயல்பாடுகளின் மூலம் தம்மை ஒரு ஜெயலலிதாவாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அவரது இந்த மாற்றத்தைக் கண்டு மிகவும் அதிர்ந்து போயுள்ளதாம் மன்னார்குடி கோஷ்டி.












Click it and Unblock the Notifications