தமிழகம் முழுவதும் ஓணம் கொண்டாட்டம்- வேலம்மாள், வித்யா மந்திர் பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்!
சென்னை: கேரள மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை வேலம்மாள் பள்ளியில் அத்தப்பூ கோலம், சிறப்பு நடனங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதே போன்று கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கேரள மக்கள் நாளை ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி கேரளாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக இன்று முதல் நான்கு நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உற்சாகம் தரும் ஓணம்:
உத்திராட நட்சத்திர நாளான இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பாலக்காட்டில் அரசு சார்பு நிகழ்ச்சிகளை இன்று மாலை, 5:30 மணிக்கு வனத்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

புதுப் புது கலைநிகழ்ச்சிகள்:
அட்டப்பாடி மற்றும் மலம்புழா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.திருச்சூர் மாநகராட்சியில் 31 ஆம் தேதி புலி ஆட்டம் நடக்கிறது. இதை பார்க்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என்பதால் சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள்:
தமிழகத்திலும் சென்னை வேலம்மாள் பள்ளி, கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளிகளில் மாணவ,மாணவிகளுக்கான சிறப்பு ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தமிழகத்திலும் உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில், சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மலையாளிகள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications