ஊட்டியில் ஒரே நாளில் தலை கீழான மிகப்பெரிய அரசு அதிகாரியின் வாழ்க்கை.. ஆசிரியர் வைத்த ஆப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஜான் சிபு மாணிக் என்பவர் அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை பணி நிரந்தரம் செய்ய பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிகல்வித்துறை அனுமதி மறுத்தது. அவர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உத்தரவு வந்தது. ஆனால் பணி நிரந்தர ஆணை வழங்க ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தொடக்க கல்வி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 40 வயதாகும் ஜான் சிபு மாணிக் என்பவர் அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பணி நிரந்தரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை மறுத்துவிட்டது..

இதையடுத்து ஜான் சிபு மாணிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்றும், சம்பள நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக ஜான் சிபு மாணிக், நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சந்தோஷை அணுகினார்.
ஆனால் அவர் லஞ்சமாக ரூ.5 லட்சம் கேட்டாராம். அவ்வளவு பணம் ஜான் சிபு மாணிக்கிடம் இல்லை என்பதால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.2 லட்சம் மட்டும் தர முடியும் என கூறினாராம். இதையடுத்து அந்த 2 லட்சம் லஞ்சமாக கொண்டு வர சந்தோஷ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் ஜான் சிபு மாணிக், ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி வீட்டில் வைத்து சந்தோஷிடம் ஜான் சிபு மாணிக் வழங்கியுள்ளார். அந்த பணத்தை சந்தோஷ் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாதன பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். கைதான நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சந்தோஷிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications