சென்னை: காதலுக்கு முட்டுக்கட்டை கருகிப் போன காதல் ஜோடி
சென்னை: சென்னை செங்குன்றம் அருகே இளம் ஜோடி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே செங்குன்றம் சூரப்பட்டு-புத்தாகரம் சர்வீஸ் சாலையில் நேற்று பிற்பகல் ஒரு மொபட் எரிந்து கிடந்தது. அதன் அருகே ஒரு இளம்பெண் உடல் எரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் உடல் கருகிய நிலையில் வாலிபர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.
என்ஜினியர் சுகன்யா
இதில், எரித்துக்கொல்லப்பட்ட பெண், ஆவடி காமராஜர் நகர் நேதாஜி தெருவை சேர்ந்த நீலகண்டன் என்பவரின் மகள் சுகன்யா என்று தெரிந்தது. நீலகண்டன், ஆவடி ஐசிஎப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
என்ஜினியரான சுகன்யா, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனக்கு தெரிந்த அனாதை இல்லத்துக்கு குழந்தைகளை பார்க்க போவதாக தாயிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
காதல் ஜோடிகள்
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இறந்தார். இது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த வாலிபர் சென்னை கோயம்பேடு சின்மயா நகர் ஐயப்பா நகரில் வசித்துவரும் தனியார் வங்கி ஊழியர் வெங்டேசன் என்பவரின் மகன் கார்த்திக் (23) என்று தெரியவந்துள்ளது.
பெற்றோர் எதிர்ப்பு
கார்த்திக்கும் சுகன்யாவும் காதலித்துள்ளனர். இதற்கு கார்த்திக்கின் பெற்றோர் சம்மதம் கூறியுள்ளனர். ஆனால் சுகன்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.
எரித்துக் கொலை
காரணம் கார்த்திக்கின் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்ததே என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் எரிந்துபோன சம்பவம் போலீசாருக்கு பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
போலீஸ் விசாரணை
இவர்கள் எதற்காக கருகிப் போனார்கள், இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்ற கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர்.
எரிந்து போன ஜோடிகள்
கார்த்திக்கை சுகன்யா சந்திக்க கூடாது என்பதற்காக சுகன்யாகவை வேலையை விட்டே நிறுத்தியுள்ளனர் அவரது பெற்றோர்கள். இந்த நிலையில் ஞாயிறன்று இருவரும் கோவிலில் சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு பின்னர் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக தங்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளனர். இதன்பின்னர் இருவரும் எரிந்து போயுள்ளனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications