உலக அரசியலையே புரட்டிப் போட்ட பெரும் பயணங்கள்... சாதிப்பாரா ஓபிஎஸ்?

உலக அரசியலை எத்தனையோ பெரும் பயணங்கள் புரட்டிப் போட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் மேற்கொள்ளும் பயணம் அதிமுகவின் புதிய புயலை கிளப்புமா என்க்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

-பா. கிருஷ்ணன்

அண்ணா திமுக இணைவதற்கான சாத்தியக் கூறு இல்லை என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொள்கிறார்.

அரசியல் நடவடிக்கைகளுக்கும் பயணங்களுக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. ஓ.பி.எஸ். மேற்கொள்ள இருக்கும் பயணம் பாத யாத்திரையா என்று தெரியவில்லை. ஒரு வேளை தேர்தல் பிரசாரத்தைப் போல் வாகனத்தில் ஊர் ஊராகச் சென்று, மக்களிடம் ஒலிபெருக்கியில் பேசப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

OPS to get more support from ADMK Cadres through state wide- tour?

எதுவாக இருந்தாலும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் இதுபோன்ற பயணங்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. அதிலும் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே இத்தகைய பயணங்கள் பெரிய இயக்கத்தையும் எழுச்சியியைும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

உலக அரசியல் வரலாற்றிலேயே பெரிதும் போற்றப்பட்டவை மா சே துங் நடத்திய நீண்ட நெடிய பயணமும், மகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரையும்.

மாசேதுங் நடத்திய "நீண்ட நெடிய பயணம்" (Long March) என்று வருணிக்கப்படும் யாத்திரை 1934ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி 1935 அக்டோபரில் நிறைவடைந்தது. மாவோ தலைமையில் இந்தப் பயணத்தை மக்கள் விடுதலைப் படை நடத்தியது.

சீனாவின் மன்னராட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து கம்யூனிஸ ஆட்சியை 1949ம் ஆண்டு நிறுவுவதற்கு அந்தப் பயணமே அடித்தளம்.

ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இருந்த சியாங்கே ஷே ஆட்சியை வீழ்த்த சீனச் செம்படையும், கம்யூனிஸ்டு கட்சியும் தீரமிக்கப் போர் நடத்தியும் தொடக்கத்தில் வெற்றி பெற இயலவில்லை. 1934ம் ஆண்டு முற்றுகையை உடைத்துக் கொண்டு செம்படையும் கம்யூனிஸ்டுகளும் வெளியேறி நடத்தியதே இந்த மாபெரும் பயணம். மாசேதுங், சூ என்லாய் தலைமையில் 85 ஆயிரம் செம்படை வீரர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் 15 ஆயிரம் பேரும் சியாங்ஸி மாகாணத்திலிருந்து ஸ்ஜெசுவான் பிரதேசம் நோக்கி நடத்தினர்.

பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 1935ம் ஆண்டு ஜனவரியில் தலைவரானார். 18 மலைத்தொடர்கள், 24 ஆறுகள், 62 மாநகரங்கள் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து, இருபது கோடி மக்களைச் சந்தித்தனர். மாவோ துணைவி ஹோஜூசென், சூயென்லாய் மனைவி டெங் யிங் கா ஆகியோரும் இருந்தனர்.

மகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரை அல்லது தண்டி நடைபயணம் மிக நீண்ட பயணம் அல்ல. ஆனால், அதன் போராட்டமும் குறிக்கோளும் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. ஆங்கிலேயர்கள் இந்திய மக்கள் உண்ணும் உப்பின் மீது வரி விதித்தனர். அதற்கு அறவழியில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி குஜராத் தண்டியில் தடையை மீறி உப்பை எடுப்பதற்காக நடைபயணம் மேற்கொண்டார். அவரது போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து, கலந்துகொண்டனர். மகாத்மா காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார். காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார்.

மகாத்மா காந்திக்குப் பின்னர் ஆசார்ய வினோபா பவே பல முறை பூமிதான இயக்கத்திற்காக நாடு முழுவதும் பாத யாத்திரைகளைப் பல முறை நடத்தியிருக்கிறார்.

1983ம் ஆண்டு தேசிய அளவில் மிகப் பெரிய நடைபயணத்தை நடத்தியவர் அப்போதைய ஜனதா கட்சித் தலைவராக இருந்த சந்திரசேகர்.

இவர், 1983ம் ஆண்டு பாரத யாத்திரை என்று கன்னியாகுமரி முதல் தில்லி ராஜ்காட் வரை யாத்திரை நடத்தினார். அதையடுத்து, பாத யாத்திரை அறக்கட்டளையைத் தொடங்கினார்.

1983 ஜனவரி 6ம் தேதி தொடங்கிய இந்த பாரத யாத்திரை அதே ஆண்டு ஜூன் 25ம் தேதி தில்லியில் நிறைவடைந்தது. மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காணப் பாடுபடுவது, ஏற்றத் தாழ்வை அகற்றி சமுதாயத்தில் சமநிலை உருவாகப் பாடுபடுவது என்ற குறிக்கோளுடன் அந்த யாத்திரை நடத்தப்பட்டது. அத்தகைய லட்சியத்துக்காக பல்வேறு பாரத யாத்திரை மையங்களை அவர் நாடு முழுவதும் பயணம் செய்த பகுதிகளில் அவர் தொடங்கினார்.

1980ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி திருச்செந்தூர் கோயில் விடுதியில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். அதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி சிஜேஆர் பால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, அந்த கமிஷன் தனது அறிக்கையை விரைவில் அளித்துவிட்டது. ஆனால், அதன் மீது அப்போதைய எம்ஜிஆர் ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், அந்த கமிஷனில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, பால் கமிஷன் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரையில் திமுக தலைவர் மு. கருணாநிதி நீதி கேட்டு நெடிய பயணம் நடத்தினார்.

1982 ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி மதுரையிலிருந்து தொடங்கிய இந்தப் பயணத்தில் 200 கி.மீ. தூரம் மொத்தம் 8 நாட்கள் நடந்தார். இடையில் 8 பொதுக்கூட்டங்கள் நடத்தினார்.

கருணாநிதியைப் பின்பற்றி கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 2015ம் ஆண்டு "நமக்கு நாமே" என்ற கோஷத்துடன் "விடியல் மீட்புப் பயணம்" நடத்தினார். 2015ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 234 தொகுதிகள் பயணம் செய்து 2016 பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் நிறைவடைந்துள்ளது. 146 நாட்களில் சுமார் 3 கோடி மக்களையாவது அவர் இந்தப் பயணத்திலே சந்தித்தார்.

தமிழக அரசியலில் அதிகமான நடைபயணங்களை நடத்தியவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்தான்.

குமரி அனந்தன் ஜனதா கட்சியில் இருந்தபோது 1978ம் ஆண்டு பாத யாத்திரை நடத்தியிருக்கிறார். அதையடுத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தொண்டர்களைச் சந்திப்பதற்கான பாத யாத்திரை, 1989ம் ஆண்டு மதுவிலக்கை வலியுறுத்தி பயணம் எனப் பலமுறை நடைபயணம் நடத்தியிருக்கிறார். இவற்றுள் அவர் அதிகம் மேற்கொண்ட நடைபயணம் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவதற்காகவே.

அண்மையில் 2015ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி அவர், மதுரையில் மார்ச் 19ம் தேதி அவரது பிறந்த நாளில் நடைபயணம் தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி ராஜாஜி பிறந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தில் பயணத்தை முடித்தார்.

அதைப் போல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை குமரி அனந்தன் மதுவிலக்கு பாத யாத்திரை நடத்தியிருக்கிறார்.

சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் பாத யாத்திரை சென்று முருகனை வழிபடும் முறை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதிலிருந்து பாத யாத்திரை செல்லும் முறையானது சங்க காலம் முதலே வழக்கில் இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

குமரி அனந்தனைப் போல் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ பாதயாத்திரை நடத்தியிருக்கிறார். மதிமுக தொடங்கிய காலத்திலேயே அதிமுக அரசு மீது ஊழல் புகார் கூறி, பாத யாத்திரை நடத்தியிருக்கிறார். அதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை வைகோ நடை பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

நடைபயணம் செய்வது முன்பெல்லாம் இயக்கத்திற்காக அமைந்தது. இப்போதெல்லாம் அரசியலுக்காக நடத்தப்படுகிறது.

மத நம்பிக்கை உள்ளவர்கள் திருப்பதி, பழனி போன்ற தலங்களுக்குப் பாத யாத்திரை செல்வார்கள். ஒழுக்கம், தூய்மை, இறைவன் மீது நம்பிக்கையுடன் நடத்தப்படும் அவர்களது நோக்கம் இறைவனின் அருளைப் பெற்று உய்வது. அரசியல்வாதிகளைப் பொருத்தவரையில் மக்கள்தானே மகேசன். எனவே, மகேசனின் அருளான வாக்குகளைப் பெறுவதே அவர்களது நோக்கமாக இருப்பதில் வியப்பென்ன...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+