முதல்வராவதற்காக ஜெயலலிதாவை ஓபிஎஸ் ஏன் ஏதாவது செய்திருக்கக் கூடாது... சிவிஎஸ் பகீர்
தான் முதல்வராவதற்காக ஜெயலலிதாவை ஓ.பன்னீர் செல்வம்தான் ஏதாவது செய்திருப்பாரோ என்று தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம்: தமிழகத்தின் முதல்வராக, தான் ஆக வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை ஏதோ செய்து விட்டாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று இரு அணியினரும் விரும்புகின்றனர். எனினும் பேச்சுவார்த்தைக்கு தயார் , தயார் என்று மட்டும் கூறி வருகின்றனரே தவிர அதற்கான வேலைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் காலம் கனிந்தாலும் சில அமைச்சர்கள் மாறி மாறி குறை கூறி கொள்வதை பார்க்கும்போது இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை பார்த்தால் அந்த அணிகளும் இணையுமா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், செஞ்சி எம்பி வெ.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீதி விசாரணை
விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்கி சிவி சண்முகம் பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை தேவை என்று அந்த அணியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு நடத்தினால் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் ஓபிஎஸ்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

முதல்வர் பதவிக்காக...
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்தவர் ஓபிஎஸ்தான். தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அம்மாவை ஓபிஎஸ் ஏதாவது செய்திருப்பாரோ என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. மரணத்துக்கு பிறகு 2 மாதங்கள் முதல்வராக இருந்தவரும் அவரே.

கருணாநிதியே தரவில்லை
ஜெயலலிதா இல்லாத நிலையை பயன்படுத்திக் கொண்டு தான் முதல்வராகலாம் என்று மு.க. ஸ்டாலின் மிதப்பில் உள்ளார். கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினுக்கு அவரது தந்தை கருணாநிதியே வாய்ப்பு வழங்காதபோது மக்கள் மட்டும் எப்படி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்?

கனவிலும் நடக்காது
ஆறு, குளங்களை தூர் வாரினாலும் நமக்கு நாமே என்று எங்கு சென்றாலும் ஸ்டாலினின் கனவு பலிக்காது. எத்தனை ஆண்டுகளானாலும் சரி அதிமுக ஆட்சியே தொடரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications