கடவுளுக்கு பூஜை செய்ய சாமந்திப் பூ இருக்கலாம்.... ஊமத்தம் பூ இருக்க கூடாது... ஓபிஎஸ் 'பொளேர்'
கடவுளுக்கு பூஜை செய்ய சாமந்திப் பூ இருக்கலாம், ஆனால் ஊமத்தம் பூ இருக்கவே கூடாது என்று சசிகலா குடும்பம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கி பேசினார்.
Recommended Video

சென்னை: கடவுளுக்கு பூஜை செய்ய சாமந்திப்பூ, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் இருக்கலாம். ஆனால் ஊமத்தம் பூ மட்டும் இருக்கவே கூடாது என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சாடினார்.
திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் ஆசை.
அதைத்தான் நாம் செய்து வருகிறோம். எம்ஜிஆர் ஒரு சாதாரண மனிதராக வாழவில்லை. புனிதராக வாழ்ந்தவர். சிலருக்கு பேச்சு ஆயுதமாக இருக்கும். சிலருக்கு எழுத்து ஆயுதமாக இருக்கும். எம்ஜிஆருக்கோ பாடல்கள் ஆயுதமாக இருந்தது. பக்கம் பக்கமாக எழுதி எழுச்சியூட்டுவதைவிட, மணிக்கணக்காக பேசிப் பேசி எழுச்சியூட்டுவதை விட, பாடல்களால் வாழ்க்கையின் தத்துவங்களுக்கு புகட்டியவர் எம்ஜிஆர்.

பிறர் உழைப்பில் வாழ...
"சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... என்று எம்ஜிஆர் பாடினார். ஆனால், பிறர் உழைப்பிலேயே இதுவரை வாழ்ந்த சிலர், இப்பொழுதும் உழைக்காமலேயே வாழத் துடிக்கிறார்கள். அதைவிடக் கொடுமை, குறுக்கு வழியிலே தமிழகத்தை ஆளத் துடிக்கிறார்கள்.

கெடு விதிக்கின்றனர்
ஜெயலலிதாவிடம் தோற்றுப் போனவர்களும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களும், இந்த ஆட்சியை அசைத்துப் பார்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அரும்பாடுபட்டு ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு, சிலர் கெடு விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகமே சரியில்லை
ஜாதகம் சரியில்லாத சிலர், இந்த ஆட்சி நீடிக்காது என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். துணை முதல்-அமைச்சரும், முதல்-அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்.

ஊமத்தம் பூ இருக்கலாமா?
ஒரு குடும்பத்தின் ஆட்சி இருக்கக் கூடாது என்று சொன்னதற்காக, துணை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்ததற்காக, முதல்வர் பதவி விலக வேண்டுமாம். கடவுளுக்குப் பூஜை செய்ய, மல்லிகைப் பூ இருக்கலாம். ரோஜாப் பூ இருக்கலாம். சாமந்திப் பூ இருக்கலாம். ஆனால், ஊமத்தம் பூ இருக்கக் கூடாது.

பொற்கால ஆட்சி
தமிழக மக்களின் நலனுக்காகவே, திட்டங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக, எந்தத் தியாகத்தையும் மக்கள் சக்தியோடு செய்வதற்கும், ஜெயலலிதாவின் பிள்ளைகளான நாங்கள் தயங்கவே மாட்டோம் என்றார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications