பிரதமர் நரேந்திர மோடி சுமந்து வந்த செங்கோல் குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பரபரப்பு ட்வீட்
சென்னை: நந்தியை சுமந்து மணி மகுடத்துடன் கூடிய செங்கோல் பல நூற்றாண்டுகளை கடந்து பாரத தேசத்தின் அரச சபையில் அரியணை ஏறியதை தமிழனாய் பெருமைப்படுகிறேன் என தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ட்வீட் போட்டுள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 28) திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நேற்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்தனர் ஆதீனங்கள்.

இதையடுத்து தமிழ்நாட்டு ஆதீனங்கள் புடைசூழ, திருமறை முழங்க செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கொண்டு சென்றார் பிரதமர் மோடி. அதன்பின் தமிழ்நாட்டு செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி
பூஜைக்கு பின் புதிய நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 1947-ம் ஆண்டு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. செங்கோல் நிறுவிய பின்னர் தமிழ்நாட்டு ஆதீனங்களிடம் தலைவணங்கி ஆசீர்வாதம் பெற்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி நேற்று மிகவும் பக்திமயமாகவும் காணப்பட்டார். அதன்பின் புதிய நாடாளுமன்றத்தில் கல்வெட்டுகளை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதை தமிழக பாஜகவினர் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். தமிழுக்கும், தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான இடத்தை நாடாளுமன்றத்தில் தந்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், நந்தியை சுமந்து மணி மகுடத்துடன் கூடிய செங்கோல் பல நூற்றாண்டுகளை கடந்து பாரத தேசத்தின் அரச சபையில் அரியணை ஏறியதை தமிழனாய் பெருமைப்படுகிறேன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், நீதியை நிலைநாட்டும் செங்கோலை திருக்கரத்தில் வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் சொல்ல வேண்டிய கந்தபுராண பாடல் 12ம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்களால் எழுத்தப்பட்ட ரத்தின வரிகள்..

வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க மன்னன்!
கோல்முறை அரசு செய்க! குறைவில்லாது உயிர்கள் வாழ!
நான்மழை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! மேன்மைக்கொள் சைவநீதி! விளங்குக உலகம் எல்லாம்.
நந்தியை சுமந்து மணி மகுடத்துடன் கூடிய செங்கோல் பல நூற்றாண்டுகளை கடந்து பாரத தேசத்தின் அரச சபையில் அரியணை ஏறியதை தமிழனாய் பெருமைப்படுகிறேன்.
பாரத தேசத்தின் ஆட்சி பீடத்தின் மணிமகுடமான புதிய நாடாளுமுன்ற கட்டிடத்தினை திறந்து அதில் சோழ அரசின் குறியீடான செங்கோலை நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வரலாற்று சிறப்புமிக்க சாதனை புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு வி.ப.ஜெயபிரதீப் தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications