போலீஸ் கஸ்டடியில் வைத்து.... சசிகலா புஷ்பாவை அதிரவைத்த பணிப்பெண் பானுமதியின் வக்கீல்
மதுரை: வேலைக்கார பெண்கள் மீதான பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்து போனார் சசிகலா புஷ்பா.
ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தூத்துக்குடியின் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மீது புகார் கொடுத்துள்ள இளம்பெண் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, முன்ஜாமீன் மனுவுக்கான வக்காலத்தில் சசிகலா புஷ்பா எம்.பி., 17-ந்தேதி மதுரைக்கு வந்து கையெழுத்திட்டுள்ளதாக ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் மதுரைக்கு வரவில்லை. சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவரும் வெளிநாட்டில் இருந்துள்ளனர். போலியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முன்ஜாமீனுக்காக வக்காலத்தில் கையெழுத்திட்ட விவகாரம் தொடர்பாக சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேசுவர திலகன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களை 6 வாரத்துக்கு கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, அரசு வழக்கறிஞர்கள் கன்னித்தேவன், அன்பரசன் ஆகியோரும், சசிகலாபுஷ்பா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீராகதிரவனும், புகார் கொடுத்த இளம்பெண் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஆனந்தும் ஆஜராகி வாதாடினர்.
விசாரணையின் போது சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேசுவர திலகன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:
நீதிபதி: வக்காலத்தில் கையெழுத்திட்ட விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
சசிகலா புஷ்பா எம்.பி.: வக்காலத்தில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். டெல்லியில் வைத்து வக்காலத்தில் கையெழுத்திட்டேன். அதன்பின்பு என் கணவரிடம் வக்காலத்தை மதுரைக்கு கொடுத்து அனுப்பினேன்.
நீதிபதி: உங்கள் பதிலை இந்த நீதிமன்றம் பதிவு செய்துகொள்கிறது.
தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் விவாதம் நடைபெற்றது. அப்போது புகார் கொடுத்த பெண்களின் வழக்கறிஞர் ஆனந்த், பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கீழ்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அப்படி இருக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார்.
இது சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் வீராகதிரவன், மனுதாரர்களை பொறுத்தமட்டில் அவர்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளனர். மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அரசு தரப்பில் கூறுவது தவறானது என்றார்.
அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications