ஜனாதிபதிக்கும் ஜாதி தீண்டாமை.. விழுப்புரம்+டெல்லி.. 2 நிகழ்வையும் கனெக்ட் செய்து பா.ரஞ்சித் விளாசல்!
சென்னை : டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை அழைக்காதது நவீன தீண்டாமை என இயக்குநர் பா.ரஞ்சித் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. வரும் மே 28ஆம் தேதி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதன் காரணமாக நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் பாஜக அரசை கண்டித்துள்ளார். பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது மற்றும் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டது ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க முதல் பழங்குடியினர் குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை. சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கம் தொடர்கிறது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகளை திறப்பு விழாவுக்கு அழைக்காதது கண்டனத்திற்குரியது.
கட்சி பேதமின்றி, தேசத்தின் முதல் குடிமகள் மற்றும் சாமானிய மக்கள் சாதியால் நிறைந்த இந்திய சமூகமாகவே நீடித்திருப்பது அவலம். ஏனெனில், அவர்கள் அனைவரும் சடங்குகள் மற்றும் கலாச்சாரம் மூலம் இந்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்கள். கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை கருத்தில் கொள்ளாமல் பல கட்சிகளும், அரசாங்கங்களும் வந்து சென்றுள்ளன, அவை அனைத்தும் கலாச்சார தூய்மையைப் பாதுகாக்கவே பாடுபட்டன.

ஏற்கெனவே இருக்கும் சடங்குகளின் வடிவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், தொடர்ந்து தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் சாதியின் பெயரால் புதிய வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன. அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications