கருணாநிதியின் சட்டமன்றப் பணி வைரவிழா.. ஸ்டாலின் ராஜதந்திரம் வெற்றியா?
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை முன்வைத்து மு.க. ஸ்டாலின் வகுத்த வியூகம் வென்றுள்ளதா என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு கட்டுரை.
-பா. கிருஷ்ணன்
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் சட்டமன்றப் பணியின் வைர விழா நிகழ்ச்சியைக் கோலாகலமாக நடத்திவிட்டார் கட்சியியின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலின். ஆனால், அப்படி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததற்கான அரசியல் நோக்கம் நிறைவேறுமா, திமுக எதிர்பார்க்கும் வெற்றியை அந்தக் கூட்டம் தருமா என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
பொதுவான நோக்கத்திற்காக வெவ்வேறு கட்சிகள் இணைந்த கூட்டங்கள் சென்னையில் பல முறை திமுக தலைமையிலோ, திமுக ஏற்பாட்டிலோ நடைபெற்றது உண்டு. கருணாநிதியின் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், இலங்கைப் பிரச்சினை, சமூக நீதிக்கான விழா இப்படிப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நடைபெற்ற கூட்டங்களில் அகில இந்திய கட்சிகளும் பிற மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளும் பங்கேற்றிருக்கின்றன. அதன் நீட்சியாக புதிய அரசியல் மாற்றங்களும் உருவாகியுள்ளன.

ஆனால், அப்போதைய கூட்டங்களை முழுக்க முழுக்க திமுக தலைவர் கருணாநிதியே ஏற்பாடு செய்து வியூகம்வகுத்தார். அத்தகைய கூட்டங்கள் அகில இந்திய அளவிலும் தாக்கம் ஏற்படுத்தத் தவறியதில்லை. எழுபதாம் ஆண்டுகளில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் அதிகமான கட்சிகள் இல்லை.
நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய திமுகவே மத்தியில் ஜனதா கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டபோது, காங்கிரஸுக்கு நட்புக் கரம் நீட்டியது. அப்போது இந்திரா காந்தி ஆட்சியில் இல்லை. 1979ம் ஆண்டு மெரீனா கடற்கரையில் அதற்கு அச்சாரமாக, திமுக ஏற்பாடு செய்த முப்பெரும் விழாவுக்கு இந்திரா காந்தி அழைக்கப்பட்டார்.
அந்தக் கூட்டம் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கூட்டணி அமைவதற்குத் தொடக்கமாக அமைந்தது. அதையடுத்து கலைஞர் கருணாநிதி முன்வைத்த பிரபலமான வாசகம் "நேருவின் மகளே, வருக, நிலையான ஆட்சி தருக" என்பதாகும்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த வி.பி. சிங் போபர்ஸ் ஊழல் புகார் வெடித்ததை அடுத்து, 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து வெளியேறினார். போபர்ஸ் ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் கூட்டம் நடத்தினார். விபி சிங் தலைமையில் ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற தேசிய கட்சி உருவாக்கப்பட்டது. அப்போது திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. விபி சிங் தலைமையில் சென்னையில் நடந்த மாநாடு, ஜனதா தளம், திமுக, அகாலி தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்த தேசிய முன்னணி உருவாகக் காரணமானது. அதைத் தொடர்ந்து 1989ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது.
இப்படி கடந்த காலங்களில் பல கட்சிகள் இணைந்த மாநாடுகள் ஏதாவது ஒரு பொது நோக்கத்திற்காகக் கூட்டப்பட்டாலும் அதன் தொடர் விளைவாக அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்து வந்திருக்கின்றன.
கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சிக்கும் தேசிய அளவிலான பல தலைவர்கள் அழைக்கப்பட்டு பேசியுள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேமன் ஆகிய தேசிய கட்சியினர் பங்கேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் டெரீக் ப்ரையன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமார், தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா ஆகியோரும் பேசினர்.
இவர்கள் அனைவருமே மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்துப் பேசினர். மு.க. ஸ்டாலின் தனது உரையிலும், "மதச்சார்பற்ற அணியை உருவாக்குவோம்" என்று முழக்கமிட்டுள்ளார். மோடியின் பணமதிப்பிழப்பு முதல் பல செயல்பாடுகளைச் சாடினார்.
ஆனால், மாநிலக் கட்சிகளான மதிமுக, பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளையும் அழைத்திருந்தால், அவருக்கு வலிமை கிடைத்திருக்கும்.
2016ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் மு.க. ஸ்டாலின் நடத்திய பிரசாரத்துக்கு 90 இடங்கள் பலன் கிடைத்தது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியால் அவரது வாய்ப்பு சிதறியது. இதைப் புரிந்துகொண்டு காயை நகர்த்துவதற்கு மு.க. ஸ்டாலின் தவறிவிட்டார்.
கருணாநிதி ஏற்பாடு செய்தபோதெல்லாம் மாநில அரசியலையும் கைவிடாமலே தேசிய அரசியல் கூட்டங்களை நடத்திவந்தார். அதற்கான பலனாக 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் அவரால் ஆட்சிக்கு வர முடிந்தது.
2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவுக்கு 96 இடங்களே கிடைத்தன. அப்போது, தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் 34 உறுப்பினர்களின் ஆதரவினால், ஐந்து ஆண்டு ஆட்சியில் நீடிக்க முடிந்தது.
அதே தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுக 61 இடங்களில்தான் வெற்றி பெற்றன. அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு 6 இடங்கள் கிடைத்தன. ஆனால், விஜயகாந்த் தலைமையில் புதிதாக உருவான தேமுதிக கட்சிக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது.
2006ம் ஆண்டில் திமுகவு கூட்டணிக்கு 44.8 சதவீதமும் திமுகவுக்குத் தனியாக 26.5 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. ஆனால், அண்ணா திமுக கூட்டணிக்கு 39.9 சதவீதமும், அதிமுகவுக்குத் தனியாக 32.6 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.
அப்போது விஜயகாந்த் தலைமையில் தோன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு 8.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
அத்தேர்தலில் அதிமுக பல இடங்களில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. திமுகவும் தனியாக அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை.
வாக்குகள் சிதறியதற்கு சில மாநிலக் கட்சிகள், குறிப்பாக தேமுதிக காரணம் என்பதை ஜெயலலலிதா புரிந்துகொண்டு 2011ம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
இதைப் போன்ற நிலைமை 2001ம் ஆண்டு ஏற்பட்டது. திமுகவின் கூட்டணியில் பாஜக மட்டுமே இருந்தது. அக்கட்சியின் கொள்கையுடன் ஒத்துப் போகாத அனைத்துக் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது.
இன்னும் சொல்லப் போனால், 1996ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு வைத்ததைக் கண்டித்து மூப்பனார் தலைமையில் உருவான த.மா.கா. வும் ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்தது. காங்கிரஸும் அதில் இடம்பெற்றது. அதன் காரணமாக ஓட்டு சிதறாமல் 2001ம் ஆண்டு ஜெயலலிதாவால் ஆட்சி அமைக்க முடிந்தது.
2006ம் ஆண்டில் கிடைத்த அரசியல் அனுபவத்தை அடுத்து, 2011ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் அதிமுக விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக வுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டது. அதில், அதிமுக-தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி 203 இடங்களைக் கைப்பற்றியது. அவற்றின் வாக்கு சதவீதம் 51.9 சதவீதம். அதில், 38.4 சதவீத வாக்குகளுடன் அதிமுக மட்டுமே 150 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 119 இடங்களில் போட்டியிட்ட திமுக 23 இடங்களில்தான் வெற்றி பெற்றது. திமுக பெற்ற சதவீதம் 22.4 ஆகும்.
கருணாநிதியின் காலம் அரசியலில் மிகுந்த சோதனைகள் நிறைந்த காலமாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா என மாநிலத்திலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று தேசிய அளவிலும் ஆளுமை கொண்டவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
இப்போது மு.க. ஸ்டாலினுக்கு மாநில அளவில் எதிர்கொள்ள வேண்டிய சக்திவாய்ந்த ஆளுமை இல்லை. தேசிய ஆளுமையை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர் அகில இந்திய அரசியலில் தன்னை இன்னும் முன்னிறுத்திக் கொள்ளவில்லை.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு உண்டு.
கடந்த முறை 2016ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவர் நடத்திய பிரசார கூட்டங்கள், நமக்கு நாமே போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் அவருக்குப் போதிய பலனைத் தந்தன என்பதில் சந்தேகமில்லை. வலிமையான ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, அவரது தலைமையில் திமுக 90 இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. பல இடங்களில் திமுக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும் கவனிக்க வேண்டும்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளை மூன்று காரணங்களே நிர்ணயிக்கின்றன. ஒன்று அலை. இரண்டாவது ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு. மூன்றாவது கணிதம்.
1984, 1991 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகளால் ஏற்பட்ட அனுதாப அலை தேர்தல் முடிவை நிர்ணியித்தது. 1996ம் ஆண்டு அதிமுக மீதான கோபம் தேர்தல் முடிவை மாற்றியது. மற்ற தேர்தல்களில் பெரும்பாலும் கணிதம்தான் முடிவுகளை அளித்திருக்கிறது.
அத்தகைய சந்தர்ப்பங்களை திமுக தலைவர் கருணாநிதி சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். இப்போது, அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு திருப்தி குறைந்துவிட்டது. உறுதியான முடிவுகளை எடுக்கும் முதலமைச்சர் இல்லை. மத்திய அரசு விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைப் பற்றிய தெளிவின்மை, வசீகரம் மிக்க, அல்லது மக்களுடன் நேரடி உறவு கொண்ட தலைவர் இல்லாத நிலை. அத்தனை வாய்ப்புகள் இருந்தும் மு.க. ஸ்டாலின் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கருணாநிதியின் வைர விழாவைச் சாதகமாக்கிக் கொள்ளத் தவறிவிட்டார்.
1977ம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கருணாநிதி எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற வலிமை வாயந்த ஆளுமைகள்தான். தற்போது கருணாநிதி உடல் நலம் குன்றியிருக்கிறார். எம்ஜிஆரும் பின்னர் ஜெயலலிதாவும் மறைந்துவிட்டனர். இதனால், வலுவான ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் உருவாகியிருக்கிறது.
வேறு எந்த மாநிலக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலுவாக இல்லை. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மாநிலப் பிரச்சினைகளை முன்வைத்து, தனது மாநிலத் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள மு.க. ஸ்டாலின் தவறிவிட்டார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தேசிய கட்சிகளால் திமுகவின் அரசியல் வெற்றிக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. மாறாக, திமுகவின் வாக்குகள் இக்கட்சிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அதைப் போல் தேசிய மாநாடு, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளாலும் திமுகவுக்கு எந்த ஆதாயம் நேரப் போவதில்லை.
ஆனால், தமிழகத்தில் மாநிலக் கட்சிகள் பல தனித்துப் போட்டியிடும்போது வெற்றி பெறுவதில்லை. ஆனால், திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தால் இரு தரப்புக்கும் போதிய இடங்கள் கிடைப்பது கடந்த கால வரலாறு ஆகும்.
நாற்பது ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சு தமிழகத்தில் உள்ள தலைமை வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அமையவில்லை. இது அவரது முதல் ராஜதந்திரப் பிழை.












Click it and Unblock the Notifications