மூதேவியை துர்க்கையாக வழிபடும் திருக்கோவிலூர் கிராம மக்கள்.. ஆராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷங்கள்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே துர்க்கை அம்மனாக வணங்கப்படும் பல்லவர் கால தவ்வை மற்றும் முருகன் கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் திருக்கோவிலூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது மடப்பட்டு சாலையில் உள்ள எல்ராம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரையில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளதாகக் கிடைத்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொண்டார்.

சுமார் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள அச்சிற்பம் தவ்வை என்று கண்டறியப்பட்டது.
தலையைத் தடித்த ஜடாபாரம் அலங்கரிக்க , வட்டமான முகத்தில் , தடித்த உதடுகளும் இரு செவிகளில் மகர குண்டலமும் அணிந்து இடது கையில் மலர் மொட்டை ஏந்தியும் , வலது கையை கம்பீரமாகத் தொடையின் மீது வைத்தும் கால்களை நன்றாகப் பரப்பி நிமிர்ந்து நேராக அமர்ந்துள்ளார். கழுத்தில் ஆபரணங்களும் , கைகளில் கைவளை மற்றும் தோள்வளையும் அணிந்து , மார்புக்குக் கீழ் மடிப்புடன் வயிறும் வளமையின் குறியீடான பருத்த இடையில் ஆடையும் அழகாக காட்டப்பட்டிருந்தாலும் மார்பு கச்சை அணியாமல் காட்சி தருகிறது.
தவ்வை தாயின் வலது புறம் மகன் மாந்தியும் , இடது புறம் மகள் மாந்தியும் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.அதே போல் தவ்வையின் ஆயுதமான துடைப்பம் மாந்தன் அருகிலும் , காக்கை கொடி மாந்தி அருகிலும் காட்டப்பட்டுள்ளது.
இந்த சிற்பமைதியையும் கலைபாணியும் வைத்து இது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய தவ்வை என்று உறுதி செய்யலாம். இவ்வூர் மக்கள் இத்தவ்வையைத் துர்க்கை அம்மனாக வழிபடுவதோடு , ஆடி மாதம் மகிஷன் வதம் செய்யும் கூத்து நிகழ்வையும் நடத்துகின்றனர். வழக்கமாக மூதேவி என்ற தவறான புரிதலில் எல்லா ஊர்களிலும் கைவிடப்பட்ட தவ்வை இவ்வூரில் சிறப்புடன் துர்க்கை என்ற பெயரில் கொண்டாடப்படுவது அரிய விசயமாகும். மேலும் இது போன்ற பிரமாண்ட தவ்வை சிற்பம் எங்கும் காணக்கிடைக்காது.
அதேபோல் எல்ராம்பட்டை அடுத்த T.கொடியூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வயல்வெளியின் மத்தியில் வழிபாடில்லாமல் பாதிக்கு மேல் புதைந்த நிலையில் ஒரு சிற்பம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற பள்ளி மாணவர் தெரிவித்தார். அவ்வூர் மக்கள் அதனைத் துர்க்கை என்று அழைக்கின்றனர் .
அச்சிலையைச் சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் அச்சிற்பம் பல்லவர் காலத்திய முருகர் என்று கண்டறியப்பட்டது. சுமார் 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க , நீள்வட்ட முகத்தில் இரு செவிகளிலும் பத்ர குண்டலம் அலங்கரிக்க , கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி அணிந்து நான்கு கரங்களுடன் காட்சி தருகிறது.

மேல் வலது கரத்தில் வேலும் , மேல் இடது கரத்தில் அக்கமாலையும் ஏந்திய நிலையில் கீழ் வலது கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் கீழ் இடது கரம் இடைமீது ஊரு முத்திரையில் வைத்து , மார்பில் சன்னவீரம் அணிந்து இடை ஆடை பாதம் வரை நீண்டு நேராகப் பீடத்தின் மீது நின்றவாரு அழகுற வடிக்கபட்டுள்ளது.
இதன் சிற்பமைதியை வைத்து இச்சிற்பமும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பமாகக் கருதலாம்.இவ்வூரில் பல்லவர் காலத்திய சிவன் கோவில் ஒன்று இருந்திருக்கக்கூடும்.
இவ்வூரைச் சுற்றி அமைந்துள்ள குன்னத்தூர் , இளந்துரை , பெண்னைவலம் , வில்லிவலம் , கொணலவாடி , அருங்குருக்கை ஆகிய ஊர்களில் இதே காலகட்டத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் இருப்பது குறிப்பிடதகுந்தது. இதன் மூலம் 8ம் நூற்றாண்டில் இப்பகுதி பல்லவர் ஆட்சியின் கீழ் செழிப்புடன் இருந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது.












Click it and Unblock the Notifications