நெல்லை: 5 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை! நேரில் பார்த்த பெண் மயக்கம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு மலையடிவாரம் உள்ள கேசவநேரிப்பக்கம் தோட்டம் உள்ளது. அதில் மக்காச் சோளம் பயிரிட்டிருந்தார். தோட்டத்தைத் திருமாளும் அவரது மனைவி சாந்தியும் பராமரித்து வந்ததோடு இவர்கள் அங்கேயே 25 ஆடுகளையும் வளர்த்து வந்தனர்.
வியாழக்கிழமையன்று மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளில் 5 ஆடுகள் காணாமல் போகவே சாந்தி அவைகளைத் தேடியிருக்கிறார். அவர் மலையடிவாரம் சமீபம் சென்ற போது 2 ஆடுகள் செத்துக் கிடப்பது தெரியவர மேற்கொண்டு அந்தப்பாதையில் தேடிய போது புதரில் உறுமும் சத்தம் கேட்க சாந்தி அங்கு செல்ல, அப்போது ஒரு ஆட்டை சிறுத்தை ஒன்று அடித்துத் தின்று கொண்டிருந்ததைப் பார்த்தவர் பயத்தில் ஒட்டம் பிடித்தார். அங்கிருந்து தப்பி வந்தவர் தன் தோட்டத்தில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
சிறுத்தை நடமாட்டம் அந்த ஏரியா மக்களிடையே அச்சத்தை கிளப்பியுள்ளது. சிறுத்தை அடித்துக் கொன்ற 5 ஆடுகளின் மதிப்பு அறுபதாயிரம் மேல் போகும் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து வள்ளியூர் காவல் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது களக்காடு வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிப்பதற்காக அங்கு முகாமிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் உதகையில் ஊருக்குள் புகுந்து மூன்று பேரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில் நெல்லை அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications