பால்காரர், பேப்பர் பாய் மற்றும் பெண்கள்.. வாக்காளர்களுக்குப் பணம் தர கட்சிகள் பயன்படுத்திய நபர்கள்!
சென்னை: பால்காரர்கள், பேப்பர் போடுவோர், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் ரவுடிகள் என பல்வேறு தரப்பினரும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க கட்சிகளால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பொது தேர்தல் பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பாக ரகசிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து அதை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளனர்.
இதில் தமிழகத்தில் எப்படியெல்லாம் பணம் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து அவர்கள் அதில் விவரித்துள்ளனர். படித்துப் பார்த்தால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நமது கட்சிகள் தில்லாலங்கடிகளைச் செய்துள்ளன.

உத்திகளை மாற்றிய கட்சிகள்
வழக்கமாக கட்சியினர்தான் வீடு வீடாகப் போய் தங்களுக்குச் சாதகமானர்களுக்குப் பணம் தருவது வழக்கமாக இருந்து வந்தது இத்தனை காலமும். ஆனால் இந்த முறை கட்சிகள் உத்திகளை மாற்றி விட்டனர்.

பால்காரர் - பேப்பர் போடுவோர்
பால்காரர்கள், பேப்பர் போடுவோர் உள்ளிட்டோரை இந்த முறை தங்களது பணிக்கு கூட்டுச் சேர்த்துள்ளனர். இவர்கள் மூலம் பணத்தைக் கொடுத்து வீடு வீடாக கொடுக்கச் சொல்லியுள்ளனர்.

குடும்பப் பெண்கள்
அதேபோல வீடுகளில் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் நடுத்தர வர்க்கப் பெண்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமும் பணத்தை கொடுத்து விநியோகித்துள்ளனராம்.

ரவுடிகள்
உள்ளூர் உள்ள கட்சிகளைச் சேர்ந்த மற்றும் கட்சிகளுக்குச் சாதகமான ரவுடிகளையும் பணம் கொடுக்கும் வேலையில் பயன்படுத்தியுள்ளனவாம் அரசியல் கட்சிகள்.

பேப்பர் பாய்கள் மீது 22 புகார்கள்
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக பேப்பர் போடுவோர் மீது மட்டும் 22 புகார்கள் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு வந்ததுள்ளதாம். அதன் பேரில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பால்காரர்கள் மீது 34 புகார்கள்
அதேபோல பால்காரர்கள் மீது 34 புகார்கள் வந்துள்ளன. அதில் 29 புகார்கள் ஏற்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ரவுடிகள் மீது 29 புகார்கள்
உள்ளூர் ரவுடிகள், குண்டர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக 29 புகார்கள் வந்து 29 புகார்களும் ஏற்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

5825 புகார்கள்
தேர்தல் தொடர்பாக மொத்தம் 5825 புகார்கள் வந்துள்ளன. அதில் 5463 புகார்கள் ஏற்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 60 புகார்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறதாம்.

பரிசுகள் - டோக்கன்கள்
வாக்காளர்களுக்குப் பணம் தராமல் பரிசுகள், டோக்கன்களையும் அரசியல் கட்சியினர் கொடுத்துள்ளனர். பரிசுகள் கொடுத்ததாக 146 வழக்குகளும், டோக்கன்கள் தந்ததாக 34 வழக்குகளும் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications