கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்? ரயிலை நிறுத்தி போராட்டம் செய்த பயணிகள்
திருப்பத்தூர்: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் துணை ராணுவப் படையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலை ஜோலார்பேட்டையில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9.00 மணிக்கு கோவை நோக்கி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது இந்த ரயிலின் முன்பதிவு செய்யப்படாத (அன்ரிசர்வ்டு) பெட்டியில் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் பயணித்து வந்துள்ளனர். அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், ரயில் பெட்டிக்குள் துணை ராணுவப் படையினர் மது அருந்தியதாகவும், தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டு ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணித்ததாக கூறப்படுகிறது. இரவு நேரம் ஆன போதும் அவர்கள் தூங்காமல் கத்திக்கொண்டு மற்ற பயணிகளையும் தூங்க விடாமல் செய்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் கத்திக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் தூங்க முடியாமல் பயணிகள் தவித்துள்ளனர். இதையடுத்து இரு பயணிகள் இது குறித்து துணை ராணுவப்படையினரிடம் கேட்டுள்ளனர். இதற்கு, 'தாங்கள் ராணுவ வீரர்கள் எங்களிடமே கேள்வி கேட்கிறீர்களா? என்று கேட்டதாகவும், மேலும் இரு பயணிகளை மிரட்டி தாக்கியதாகவும், செருப்பால் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது துணை ராணுவப் படையினர் அவர்களுக்குள்ளே தாக்கி கொண்டதாகவும், அதில் ஒருவருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசாரிடம் பயணிகள் துணை ராணுவப் படையினரை ரயிலில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார் துணை ராணுவப் படையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறக்கினர். இதையடுத்து அங்கிருந்த அந்த ரயில் புறப்பட்டு சென்றது.
துணை ராணுவப்படையினர் ரயிலில் ஏறியதில் இருந்து பயணிகளுக்கு தொந்தரவு அளித்ததாகவும், குறிப்பாக பெண் பயணிகளை பாத்ரூம் செல்லவிடாமல் ஹிந்தியில் திட்டியதாகவும் ரயிலில் பயணித்த பயணிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications