சென்னை-பெங்களூரு பஸ் பாதிவழியில் பழுது: பஸ் நிறுவன கம்ப்யூட்டரை 'பறிமுதல்' செய்த பயணிகள்
வேலூர்: தனியார் பஸ் நடுவழியில் ரிப்பேர் ஆனதால் ஆத்திரமடைந்த பயணிகள், பஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்த சம்பவம் வேலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 25 பயணிகளுடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் அந்த பஸ், வேலூர் அருகே சத்துவாச்சாரி பகுதியில் வந்தபோது, திடீரென பஸ்சில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் வேலூரிலுள்ள அந்த பஸ் நிறுவன புக்கிங் ஆபீசில் உட்காரச் செய்யப்பட்டனர். மேலும், பஸ்சை ரிப்பேர் செய்ய நேரம் ஆகும் என்பதால் அடுத்ததாக காலை 10 மணிக்கு வரும் பஸ்சில் உங்களை ஏற்றி பெங்களூரு அனுப்பி வைக்கிறோம் என்று அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
காலதாமதமாக பெங்களூரு சென்றால், பணிகள் பாதிக்கப்படும் என்று கூறிய பயணிகள், டிக்கெட் பணத்தையாவது திருப்பி தாருங்கள், வேறு பஸ் பிடித்து செல்கிறோம் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் ஒப்புக்கொள்ளாத தனியார் பஸ் நிர்வாகிகள், வேண்டுமானால் ஆளுக்கு ரூ.100 மட்டும் தருவோம். அதையும் பெங்களூரு சென்றுதான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனராம்.
இதனால் பயணிகளுக்கும், ஆபீஸ் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சில பயணிகள், டிக்கெட் பணத்துக்கு பதிலாக உங்கள் ஆபீசை ஜப்தி செய்கிறோம் என்று கூறி, அங்கிருந்த கம்ப்யூட்டர், கீ-போர்ட், மானிட்டர்களை எடுத்துக் கொண்டு வேறொரு பஸ்சில் பெங்களூரு நோக்கி சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சி வைத்தியத்தால், தலைசுற்றலுக்கு உள்ளான தனியார் பஸ் நிர்வாகிகள், வேலூர் போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, பயணிகளை மடக்கி பிடிக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வாணியம்பாடி பைபாஸ் சாலை வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அங்கு கம்ப்யூட்டர்களுடன் 12 பயணிகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், இதுபோல செய்ய கூடாது என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனராம்.
பயணிகளை எச்சரித்த போலீசார் ஏன் அந்தப் பயணிகளுக்கு பஸ் நிறுவனத்திடம் இருந்து காசை திரும்பி வாங்கித் தர அக்கறை காட்டவில்லை?. அந்த பஸ்சுக்குப் பின்னால் எந்த எந்த பினாமிகளோ.. யார் கண்டது?












Click it and Unblock the Notifications