ஜெ.வுக்கு மட்டும் புது ரோடு .. எங்களுக்கு ஓட்டை உடைசலா.. கரூரில் பொங்கிய மக்கள் சாலை மறியல்!
கரூர்: முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக வந்தபோது புது தார்ச் சாலை போட்ட அரசு, தங்களது பகுதியில் சாலையை சரி செய்யாமல், அப்படியே நிறுத்தி வைத்துள்ளதைக் கண்டித்து கரூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தனைக்கும் இந்த சாலையானது போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதிக்குட்பட்டது என்பதுதான் கொடுமையாகும்.
இந்த சாலை மறியலால் கரூர் - திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுங்கம் கேட் டூ காந்தி கிராமம்
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் கரூர் தொகுதிக்குட்பட்ட சுங்ககேட் - காந்திகிராமம் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

3 மாதமாக கிடப்பில்
பின்னர் நன்கு இருந்த சாலையை பறித்த நெடுஞ்சாலைதுறையினர் 3 மாதங்களாக கிடப்பில் போட்டது.

அடிக்கடி விபத்து.. கண்ணைப் பறிக்கும் தூசி
இதனால் அடிக்கடி விபத்துகளும், இந்த சாலையினால் தூசிகள் பறந்து பொதுமக்களுக்கு அடிக்கடி இடையூறும் ஏற்பட்டது.

கொந்தளித்த மக்கள்
இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் - திருச்சி சாலை போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

ஜெ.வுக்கு மட்டும் புதுச் சாலையா
மேலும் இப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் கடந்த 13 ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கரூர் திருமாநிலையூரில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். ஹெலிகாப்டரில் வந்த முதல்வருக்கு திருமாநிலையூரில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை புத்தம் புதிய தார்சாலை அமைக்கப்பட்டதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக எந்த தீர்வும் காணவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

போலீஸ் சமரசம்- போராட்டம் வாபஸ்
1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதின் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications