நீண்ட இடைவெளிக்கு பின் மீன்வரத்து- ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இடைவெளியின்றி குவிந்த மக்கள்
ஜெகதாப்பட்டினம்: ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இன்று மீன்வாங்குவதற்காக சமூக இடைவெளியை பின்பற்றாமல் பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் 433 விசைப்படகுகளுடன் நேற்று கடலுக்கு சென்றனர். கொரோணா தாக்கத்தினால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

கடலுக்கு சென்ற மீனவர்கள்
இதனால் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். வழக்கமாக காலை 6 மணிக்கு டோக்கன்கள் கொடுத்து கடலுக்கு சென்று மறுநாள் காலையில் மீனவர்கள் வருவது வழக்கம். ஆனால் நேற்று ஒரு மணிக்கு கடலுக்கு சென்றதால் 80% விசைப்படகு மீனவர்கள் மட்டுமே தற்போது கரைக்கு திரும்பியுள்ளனர்.

கடற்கரையில் மக்கள் கூட்டம்
இந்த நிலையில் இன்று காலை முதலே ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் மீன்களை வாங்க பெருந்திரளாக மக்கள் குவிந்து வந்தனர். படகுகள் வந்த உடனேயே மீன்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டன. மீன்களை பிரெஷ்ஷாக வாங்கி செல்ல வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கரையில் திரண்டிருந்தனர்.

முக கவசம், சமூக இடைவெளி
முக கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் திருப்பூர் தென்னம்பாளையத்தில் இதேபோல் மீன்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டது.

அலைமோதிய கூட்டம்
இதேபோல் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும் பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தீவிரமாக தாக்கி வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சி மீன் மார்க்கெட்டில் கூட்டம்
காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே செயல்பட துவங்கிய மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் 1 கிலோ 200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மீன்கள் விற்கப்பட்டன. மீன் மார்க்கெட்டில் ஒரு சில கடைகள் நகராட்சியிடம் அனுமதி பெற்று நடைபெற்றாலும் வெளிப்புற சாலையோரங்களில் ஏராளமான கடைகளும், மீன்களை வெட்டி தருபவர்களும் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சுற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications