மதுரையில் எழுச்சி மாநாடு... பிப். 7முதல் கடலூரில் பிரச்சாரம்.. தேர்தலுக்குத் தயாராகும் வைகோ அணி
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு நாங்கள் தயார் என்று அறிவிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு பெறுவதில் பிசியாக, மக்கள் நலக்கூட்டணியோ தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டது.
ஜனவரி 26ம் தேதியன்று மதுரையில் அரசியல் எழுச்சி மாநாடு, பிப்ரவரி 6ல் புதுச்சேரியில் பொதுக்கூட்டம், பிப்ரவரி 7ம் தேதி கடலூர், நாகையில் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ.
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் இன்று கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி சார்பாக மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் 26ம் தி நடக்கிறது. இந்த மாநாடு தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நுழைவு வாயிலாக அமையும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
லட்சக்கணக்கான தொண்டர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. 4 கட்சிகளும் இணைந்து பல்வேறு கட்டங்களாக கூட்டங்களை நடத்தி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தும். பல கேள்விகளுக்கு இந்த மாநாடு விடை கொடுத்து விடும்.
தேர்தலுக்கு முன்பு இந்த 4 கட்சிகளும் இணைந்து இருக்குமா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. நாங்கள் இதுவரை இணைந்து செயல்படுகிறோம். வெள்ள நிவாரணப் பணி மற்றும் பல்வேறு போராட்டங்களை இணைந்து நடத்தி இருக்கிறோம். இது கொள்கை கூட்டணியாக உருவாகி உள்ளது.
இந்த மாநாட்டுக்கு பிறகு பிப்ரவரி 6ம்தேதி புதுச்சேரியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது. அதில் 4 கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறோம். அதன் பிறகு எங்களது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறோம். 7ம்தேதி கடலூர், நாகை மாவட்டங்களில் 4 பேரும் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறோம். 8ந்தேதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும், 9ம்தேதி புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் நடக்கிறது.

நேர்மையான ஆட்சி
மதுரையில் நடைபெறும் மாநாடு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். இந்த மாநாட்டில் கூட்டணி ஆட்சி, நேர்மையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி, மது இல்லாத ஆட்சி போன்றவற்றை மையமாக வைத்து பிரசாரப்படுத்துவோம்.

நம்பிக்கைதான் பலம்
மக்கள் நலக்கூட்டணி பற்றி 65 சதவீதம் பேச தொடங்கிவிட்டனர். எங்களது அமைப்பு இளைய தலைமுறையினரிடம் வேகமாக பரவி வருகிறது. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகுந்த நம்பிக்கையுடன் மக்களை சந்திக்கிறோம். எங்களுக்கு நம்பகத்தன்மைதான் பலம்.

நிச்சயம் ஜெயிப்போம்
இந்த கூட்டணி கரை சேருமா? சேராதா? என்று கேட்டனர். சேர்ந்து விட்டோம். நீடிக்க வாய்ப்பு இல்லை என்றார்கள். நீடித்து விட்டோம். ஜெயிக்கப்போவதில்லை என்கிறார்கள். ஆனால் தேர்தலில் கண்டிப்பாக ஜெயிப்போம். இந்த நம்பிக்கையுடன் முன் செல்கிறோம்.

7 தமிழர் விடுதலை
ஹைதராபாத் மாணவர் தற்கொலை தொடர்பாக மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் 161-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.

வேர்களைத்தேடி
மக்கள் நலக்கூட்டணியைப் பற்றியும், தேர்தலை சந்திக்கப் போவதைப் பற்றியும் மக்களிடம் எடுத்துக்கூற வேர்களைத் தேடி என்ற பயணத்தை ஜனவரி 30ம் தேதி முதல் தொடங்கப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

கலைக்குழுக்கள் மூலம் பிரச்சாரம்
அதிமுக, திமுகவிற்கு மாற்றுதான் மக்கள் நலக்கூட்டணி என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். வீதி நாடகங்கள், கலைக்குழு மூலம் பாடல்கள் பாடியும் புதுமையான முறையில் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு எப்படி
கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவின் விஜயகாந்த், தமாகாவின் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்துள்ளது மக்கள் நலக்கூட்டணி. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு ரியாக்சனோ, சிக்னலோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டனர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள். தேர்தலில் இவர்களுக்கு மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications