லோக்சபா தேர்தலில் காங்.குக்கு மக்கள் நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள்.. பொன் ராதாகிருஷ்ணன்

தென்காசி அருகேயுள்ள குற்றாலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில மகளிர் அணி சார்பில் செயற்குழுக்கூட்டம் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் மாநில தலைவர்பொன் ராதா கிருஷ்ணன் கலந்துக் கொண்டார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கனடா கலந்துக் கொள்ளாதது குறித்து இங்கிலாந்து பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதோடு இந்திய பிரதமர் கலந்து கொள்ளாதது குறித்தும் வர்ணித்துள்ளார்.
அவர் கூறிய கருத்தின் அடிப்படையில் இலங்கையில் நடைப்பெற்ற மனித உரிமைமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவில்லை, கனடா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் சொல்லியுள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஏன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய பிரதமர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை சொல்லும் போது அவர் தனக்கு எழுதிய கடிதத்தில் மனித உரிமை மீறல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆகவே தேவையற்ற வகையில் இந்திய பிரதமரை ஒரு பொய்யராக ராஜபக்சே காட்டி விட்டாரோ என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான காரணத்தை இந்திய பிரதமர் அறிவிக்க வேண்டும்.இங்கிலாந்து பிரதமர் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் போது அங்கு நடைப் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்புவதாகவும், வடக்கு மாகாணத்தில் சென்று அங்கு வாழும் மக்களை சந்தித்து குறைகளை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு நமது பாரட்டுக்கள்.
தமிழக மக்களின் எதிர்ப்புக்களை மீறி காமன்வெல்த் மாநாட்டிற்கு சென்ற காங்கிரஸ் கட்சிக்கும், அதனோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியானத் தீர்ப்பினை வழங்குவார்கள். பாரதிய ஜனதா கட்சிக்கு வலு சேர்க்கும் வண்ணம் டிசம்பர் 1ம் தேதி முதல் 12678 தமிழக கிராமங்களில் வீடு தோரும் மோடி, இல்லம் தோறும் தாமரை என்ற பிரசார பயணம் தொடங்குகிறது. இதில் 12678 பேர் பங்கேற்கிறார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications