அமைச்சர் நாராயணசாமி காரில் பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு: புதுச்சேரியில் பதற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காரின் அடியில் பைப் வெடிகுண்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாராயணசாமி டெல்லியில் இருப்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி வீடு புதுச்சேரியில் எல்லையம்மன் கோவில் அருகே உள்ளது. அமைச்சர் நாராயணசாமி தற்போது டெல்லியில் இருக்கிறார்.

இன்று காலை 10 மணிக்கு அவரது அலுவலக ஊழியர் தென்னரசு என்பவர் வீட்டின் முன்பு இருந்த அமைச்சரின் காரை சுத்தம் செய்துள்ளார். அப்போது, காரின் அடியில் பைப் வெடிகுண்டு இருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பைப் வெடிகுண்டை புதுச்சேரி பழைய துறைமுகம் அருகே உள்ள விமான நிலைய ஓடு பாதைக்கு கொண்டு சென்று சோதனை நடத்தி வருகி்ன்றனர்.
முக்கால் அடி கொண்ட பைப் வெடிகுண்டில் திரி பாதி எரிந்த நிலையில் இருந்தது. வடக்கு எஸ்.பி. திரிபாதி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமியை பைப் வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரி காங்கிரசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து நாராயணசாமியின் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு குவிந்துள்ளனர். மத்திய அமைச்சரான நாராயணசாமி வீட்டிற்கு எப்போதும் இரண்டு முதல் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், காவலர்களுக்கும் தெரியாமல் பைப் வெடிகுண்டு எப்படி வைக்கப்பட்டது? இதில் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் பதற்றம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி காமராஜ், அமைச்சர் நாராயணசாமியின் காரின் அடியில் மர்ம பொருள் ஒன்று இருப்பதாக காலை 8.40 மணிக்கு கார் ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
காவல்துறையினர் விரைந்து வந்து மர்ம பொருளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். மர்ம பொருள் பிரிக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

சோதனைக்கு பின்னரே அது வெடிகுண்டா என்பது தெரியவரும். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளது. இதன் பி்ன்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணைக்கு பின்னர் தெரியவரும். வீட்டில் சிசிடிவி கேமிரா பொருத்தப்படாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, நாராயணசாமி வீடு உள்ள அண்ணாசாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு பதற்றமாக நிலை காணப்படுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications