தவறான பொருளாதார முடிவுகளுக்கு மோடி மன்னிப்பு கோர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தனது தவறான பொருளாதார முடிவுகளுக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓர் ஏழைப்பிரதமர் நாட்டையாளப் போகிறார் எனப் பரப்புரை மேற்கொண்டு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த பாஜக, ஏழை எளிய மக்களுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய அத்தனை திட்டங்களையும் மொத்தமாக நிறைவேற்றி அவர்களின் வயிற்றிலடித்துவிட்டது. வளர்ச்சி எனும் வர்ணம்பூசி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

 தோல்வியை வெற்றி எனப் பொய்

தோல்வியை வெற்றி எனப் பொய்

அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்ற தவறான பொருளாதார முடிவுகள் நாட்டு மக்களுக்குத் தாங்கொணாத் துயரத்தைத் தந்து மிகப்பெரும் பொருளாதாரப் படுதோல்வியை எய்திவிட்ட நிலையில் அவைகளை இன்னும் தனது ஆட்சியின் சாதனைகளாகக் காட்ட முயலுவது அபத்தத்தின் உச்சமாகும்.

 மோடி தயாரா ?

மோடி தயாரா ?

இதைக் கறுப்புப்பணத்திற்கு எதிரான போர் எனப் பிரகடனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அச்சம்பவம் முடிந்து ஓராண்டைக் கடந்திருக்கிற நிலையில் அப்போரினால் விளைந்த நன்மைகளை நாட்டு மக்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும். பண மதிப்பிழப்பிற்குப் பிறகு குறிப்பிட்ட விழுக்காடு பணம் வங்கிக்குத் திரும்பவே திரும்பாது என்று சொன்ன மோடி மீட்கப்பட்ட பணத்தின் புள்ளிவிபரங்களை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

 5000 கோடி நஷ்டம் தான்

5000 கோடி நஷ்டம் தான்

செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் 99 விழுக்காடு பணம், அதாவது, புழக்கத்திலிருந்த 15,44,000 கோடி ரூபாய் பணத்தில் 15,28,000 கோடி ரூபாய் பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் வங்கிக்குக் கிடைத்த இலாபம் வெறும் 16,000 கோடி ரூபாய். ஆனால், புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவோ 21,000 கோடி ரூபாய் எனும்போது பணமதிப்பிழப்பில் 5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில் எதனை அடிப்படையாக வைத்து இதனை வெற்றிகரமான நடவடிக்கை எனப் பாஜகவினர் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

 மாற்றிமாற்றி பேசும் பா.ஜ.க

மாற்றிமாற்றி பேசும் பா.ஜ.க

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி எனத்தெரிந்தும் எதற்குக் கபடவேடம் போட்டு மக்களை ஏமாற்ற முனைய வேண்டும்? கறுப்புப்பண ஒழிப்பு என்றும், கள்ளப்பண ஒழிப்பு என்றும், பணமில்லா பரிவர்த்தனை என்றும் இலக்கினை மாற்றிக்கொண்டே வந்த பாஜக அரசு, தற்போது வரிஏய்ப்புச் செய்தவர்கள் இதன்மூலம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்று புதிய பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கிறது.

 ஏன் வருமான வரித்துறைச்சோதனை ?

ஏன் வருமான வரித்துறைச்சோதனை ?

வரி ஏய்ப்புச் செய்தவர்களைக் கண்டறிவதுதான் பண மதிப்பிழப்பின் நோக்கமென்றால் அதற்கு அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையுமே போதுமே, அதற்கு எதற்குப் பண மதிப்பிழப்பு? வரி ஏய்ப்புச் செய்தவர்களெல்லாம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்றால், தற்போது நடக்கிற வருமான வரிச்சோதனைகளெல்லாம் எதற்காக நடக்கிறது?

 ஜி.எஸ்.டி.,யின் தோல்வி

ஜி.எஸ்.டி.,யின் தோல்வி

பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட சரிவிலிருந்து நாடு மீண்டு வருவதற்குள் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அறிமுகம் செய்வித்துத் தற்போது அதுவும் தோல்வியில் முடிந்து இந்தியப் பொருளாதாரம் அதளப் பாதாளத்திற்குச் சென்றிருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் சந்தை விரிவாக்கத்திற்கு உதவும் இவ்வரிக்கொள்கையால் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறுகுறு தொழில்கள் மொத்தமாய் முடங்கிவிட்டது.

 மாநிலை உரிமைகள் பறிப்பு

மாநிலை உரிமைகள் பறிப்பு

உலகிலேயே அதிகப்படியாக மறைமுக வரி ( INDIRECT TAX) விதித்து மக்களின் உழைப்பைச் சுரண்டும் இந்திய நாட்டின் வரிக்கொள்கையை மாற்றியமைக்காது 28 விழுக்காடு வரை ஜி.எஸ்.டி. வரிபோட்டு மக்களின் இரத்தத்தை அட்டைப்பூச்சியாய் மாறி உறிஞ்சுகிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. சரக்கு மற்றும் சேவை வரிமுறை இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநிலங்களின் பொருளியல் உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானது என்று தொடக்கத்திலேயே நாம் தமிழர் கட்சி இவ்வரி முறையினை எதிர்த்தது.

 ஏன் திடீர் வரிக்குறைப்பு

ஏன் திடீர் வரிக்குறைப்பு

ஜி.எஸ்.டி. வரி கவுன்சிலானது, 178 பொருட்களின் மீதான வரியை 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது. ஆனாலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான 18% வரி, தீப்பெட்டிகளுக்கு விதிக்கப்பட்ட 18% வரி, திரைப்படங்களுக்கான அதிகப்படியான வரி போன்றவை இன்னும் தளர்த்தப்படாமலிருக்கிறது. அவற்றின் வரிவிழுக்காட்டையும் குறைக்க வேண்டும் என்ற சராசரி மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பிறகு மத்திய அரசு செவிசாய்த்திடவேண்டும்.

 ஜி.எஸ்.டி தோல்வி எதிரொலி

ஜி.எஸ்.டி தோல்வி எதிரொலி

இந்தத் திடீர் வரிகுறைப்பு நடவடிக்கைகளானது குஜராத்தில் நடைபெறவிருக்கிற தேர்தல் சுய இலாபத்திற்காகத்தான் என்றாலும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதையே இதுகாட்டுகிறது. ஆகவே, மத்திய அரசானது தனது தவறான பொருளாதார முடிவுகள் தோல்வியடைந்துவிட்டதை இனியாவது பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும்.

 நாட்டு மக்களிடம் மன்னிப்பு

நாட்டு மக்களிடம் மன்னிப்பு

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 விழுக்காடு வரை குறைந்து, 3 இலட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஆகையினால், நாடு எதிர்கொண்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சியை நாட்டையாளும் பாஜக அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தோடு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Narendra Modi apologies to people of India for making them suffer because of his wrong Econamic Actions. He also added that Demonetization and GST tax are the act of Failures.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற