பெற்ற தாயையே பாட்டிலால் தாக்க முயற்சித்தார் அன்புமணி.. மகன் மீது ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
சென்னை: முகுந்தன் விவகாரத்தில் தனது தாய் சரஸ்வதி மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்க முயன்றதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், நான் என்ன தவறு செய்தேன் எனக் கேள்வி எழுப்பி இருந்தார் அன்புமணி. இந்நிலையில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

ராமதாஸ் பேசுகையில், "நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்பும் செயல். உண்மையில் தவறு செய்தது அன்புமணி அல்ல, நான் தான். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆட தொடங்கியது அன்புமணி தான். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் மேடை நாகரிகம் எதுவுமே இல்லாமல் நடந்து கொண்டது யார்?
அன்று மேடையில் மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு இருந்தது சரியா? மைக்கை தலை மேல் தூக்கி போடுவது போல் போட்டாரே? அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை. அவர் தவறான ஆட்டத்தை ஆடி வருகிறார். ஏதோ போகிற போக்கில் குற்றம் சாட்டவில்லை ஆதாரத்துடன் தான் சொல்கிறேன்.
மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் செயல்படுகிறார் அன்புமணி. தான் செய்த செயலை மறைத்து கட்சியினரிடமும் மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சித்து வருகிறார். பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தனது தாயை பாட்டில் எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி எறிந்தார். நல்லவேளை பாட்டில் அவர்மீது படவில்லை. தனது குருவை அவமதித்தவர். கூசாமல் பொய் சொல்வார்.
பொதுக்குழுவிற்கு தமிழ்க்குமரன் வரக்கூடாது என்று அன்புமணி என்னிடம் கூறினார். பாமகவை யார் உழைத்து வளர்த்தார்கள். சோறு தண்ணீரின்றி கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தேன். தகப்பனிடம் தோற்பது என்பது மானக்கேடு இல்லை. அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை. அன்புமணிக்கு தலைமைப் பண்பு அறவே இல்லை.
பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன், அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? 4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்?" எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications