ஒரு மாதமாக தூங்காமல் மன உளைச்சலில் அன்புமணி.. ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: ஒரு மாத காலமாக தூக்கமின்றி தவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனையுடன் கூறிய நிலையில் அவரது ஆதங்கப் பேச்சு குறித்து வரும் வியாழக்கிழமை பதில் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை என தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தார்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
லோக்சபா தேர்தலுக்குப் பின், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. சமீபத்தில், அன்புமணியை, பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார்.
அதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார். அண்மையில் ராமதாஸ் கூட்டிய மா.செக்கள் கூட்டத்தை அன்புமணி மட்டுமல்லாது மாவட்ட செயலாளர்களும் புறக்கணித்தனர். அன்புமணியுடன் மனக்கசப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், மனக்கசப்பு இல்லை. இனிப்பு தான் இருக்கிறது. இனிப்பு செய்தி சொல்கிறேன் என்று பதில் அளித்து இருந்தார்.
அன்புமணி பேச்சு
இந்நிலையில் தருமபுரியில் பேசிய அன்புமணி, "தமிழகம் முன்னேற வேண்டுமானால், வன்னியர் சமூகம் முன்னேறவேண்டும். அதற்கு தான் பாமக கட்சி தோற்றுவிக்கப்பட்டது. வெற்றிகரமாக நடந்து முடிந்த வன்னியர் சங்க மாநாடு பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வயிற்றெரிச்சலில் குற்றம் சாட்டி பேசுகின்றனர். எவ்வளவோ தடைகளை மீறி மாநாடு நடத்தப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 1,150 நாள் ஆகிறது. ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம், தீர்ப்பு எல்லாம் சாதகமாக இருந்தும் இதனைக் கொடுப்பதற்கு ஆளுபவர்களுக்கு மனசு இல்லை. 2 மாதத்திலேயே சர்வே எடுக்கமுடியும். பதவி, பொறுப்பு மீது எனக்கு ஆசை இல்லை. ராமதாஸின் லட்சியம், கொள்கையை நிறைவேற்ற கட்சியில் உள்ளவர்கள் பாடுபடவேண்டும். 2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, நமது கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும்.
ஒரு மாதமாக தூக்கம் இல்லை
கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை, இதே நினைவுதான். ராமதாஸ் சொல்வதை செய்து முடித்தவன் இனியும் அவர் சொல்வதை செய்து முடிப்பேன். அது எனது கடமை. நமது சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். எங்களுக்கு நியாயம் வேண்டும், சமூக நீதிவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும். அதற்கு இனி வரும் காலத்தில் ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெறுவோம்." என்று பேசி இருந்தார்.
ராமதாஸ் ரியாக்ஷன்
இந்நிலையில் அன்புமணி ஒரு மாத காலமாக தூக்கமின்றித் தவிப்பதாக பேசியது பற்றி பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், இதற்கு வரும் வியாழக்கிழமை பதில் சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ராமதாஸ் என்ன விளக்கம் அளிக்கப்போகிறாரோ என பாமகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications