ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கூட்டணி கணக்கு.. தானாக பஸ்ஸை தவறவிட்ட பயணி போல தவிக்கும் பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் திருதிருவென விழித்துக் கொண்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.

ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வசதியான கூட்டணி கட்சிகளை தேடிப்பிடித்து கூட்டணி அமைக்கும் கோதாவில் குதித்து விட்ட நிலையில், பாமகவிடம் நெருங்க பல கட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன.

முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்துவிட்டதால், பாட்டாளி மக்கள் கட்சியாலும் வேறு பெரிய கட்சிகளோடு நெருங்கிப்போக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது இந்த இக்கட்டுக்கு காரணம்.

அதிமுக, திமுக எதிர்ப்பு

அதிமுக, திமுக எதிர்ப்பு

1967ம் ஆண்டுக்கு பிறகு திமுகவும், அதிமுகவுமே மாறி, மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்துள்ளன. இதனால் திராவிட கட்சிகள் என்று அழைக்கப்படும் அவ்விரு கட்சிகள் மீதும், அவற்றின் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைள் மீதும், மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நம்பும் கட்சிகளில் பாமகவும் ஒன்று.

திமுக சரிந்தது

திமுக சரிந்தது

கடந்த சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாமல் திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும், அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியாமல் போனதும், அதிமுகவுக்கு மாற்றாக இருந்த திமுக சரிவடைந்து விட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

திமுக இடத்தில் பாமக

திமுக இடத்தில் பாமக

எனவே அதிமுகவுக்கு மாற்றான கட்சியாக திமுகவை புறம் தள்ளிவிட்டு, தன்னை அந்த இடத்தில் நிலை நிறுத்த முயன்றது பாமக. அதிமுக அரசு மீதான அதிருப்தி ஓட்டுக்களை தங்கள் பக்கம் ஈர்த்து கணிசமான சீட்டுகளை வெற்றி பெற்று, ஆட்சியமைக்க ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்பது பாமக தலைமை திட்டம்.

திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு

இந்த திட்டத்தோடு மளமளவென வேலையை ஆரம்பித்த பாமக, அதற்காக கையில் எடுத்த ஆயுதம் திராவிட எதிர்ப்பு அரசியல். இலங்கை தமிழர்கள் படுகொலை சம்பவத்திற்கு பிறகு, 'திராவிடம்' என்ற சொல்லாட்சியின் மீது 'நாம் தமிழர்' கட்சியின் சீமான் சம்மட்டியால் அடிக்கத் தொடங்கியிருந்தார்.

பாமகவும் கோஷம்

பாமகவும் கோஷம்

திராவிட எதிர்ப்பு தாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்க தொடங்கியிருந்தது. சமீபத்தில் தமிழகத்தில் உதயமான எந்த கட்சியும் 'திராவிட' என்ற பெயரை கட்சியின் பெயரில் சேர்த்துக்கொள்ள தயங்கியதில் இருந்தே அப்பிரச்சாரத்தின் வெற்றி வீச்சு தெரியும். இந்த சூழ்நிலையை, தங்களுக்கும் சாதகமாக மாற்ற நினைத்து திராவிட எதிர்ப்பு கோஷத்தை பாமக முன் வைத்தது.

திராவிட எதிர்ப்புக்கு வரவேற்பு

திராவிட எதிர்ப்புக்கு வரவேற்பு

சீமான் மட்டுமின்றி ராமதாசும் திராவிட எதிர்ப்புக்கு ஆதரவு கொடுத்ததால், சமூக வலைத்தளங்களிலும் திராவிடம் கடும் சோதனைகளை சந்தித்தது. தமிழரை தமிழரே ஆள வேண்டும் என்ற கோஷம். பல சமூக வலைத்தளவாசிகளை ஈர்க்க தொடங்கியது.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

இதுபோன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்சுகளை பார்த்ததும், இன்னும் உற்சாகமடைந்த பாமக, முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவித்ததோடு, தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுக்க ஆரம்பித்தது. இரு திராவிட கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லை என்றும் ராமதாஸ் அறிவித்தார்.

கூட்டணி சிக்கலில் பாமக

கூட்டணி சிக்கலில் பாமக

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில்தான் பாமக திட்டத்திற்கு சிக்கல் வந்து சேர்ந்தது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளர்களை அறிவித்தாகிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களோடு பயணித்த மதிமுக கை கொடுக்கும் என எதிர்பார்த்தால் மக்கள் நல கூட்டணி என்று மதிமுக தனி டிராக்கில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

விஜயகாந்த், திருமா கசப்பு

விஜயகாந்த், திருமா கசப்பு

தேமுதிகவில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்பதாலும், ஏற்கனவே தேமுதிகவோடு பல 'வாய்க்கால் தகராறுகள்' இருப்பதாலும், அக்கட்சியோடும் பாமகவால் கூட்டணி வைக்க முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள்-பாமக என்பது ஏறத்தாழ திமுக-அதிமுக போன்ற எதிர் துருவங்கள்தான். எனவே அக்கூட்டணியை நினைத்து பார்க்க முடியாது.

தேசிய கட்சிகளும் கைவிரிப்பு

தேசிய கட்சிகளும் கைவிரிப்பு

கம்யூனிஸ்ட் கட்சிகளையும், காங்கிரசையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நல கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ் தங்களது தோஸ்த் திமுகவுடனேயே மீண்டும் கை போட்டுக்கொண்டது.

பாஜகவும் நழுவுகிறது

பாஜகவும் நழுவுகிறது

இப்போது பாமகவுக்கு எஞ்சியுள்ள ஒரே ஆப்ஷன் பாஜக மட்டும்தான். ஆனால், அதற்கும் வேட்டு வைக்க பாஜக தலைவர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். இரட்டை இலை பக்கமாக தாமரை நகருகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகள், டெல்லியில் இருந்து, போன் மூலம், போயஸ் கார்டனில் அரங்கேறுகிறதாம்.

ம.ந.கூ. பணால்

ம.ந.கூ. பணால்

மக்கள் நல கூட்டணியில் பிரதான வாக்கு வங்கி வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள், பாமகவை இக்கூட்டணியில் சேர்க்க முடியாது என கூறிவிட்டதால், அந்த ஜோதியில் ஐக்கியமாவதும் பாமகவுக்கு பகல் கனவு. இப்போது இருப்பது இரு வாய்ப்புகள்தான்.

எஞ்சியது இரு வாய்ப்பு

எஞ்சியது இரு வாய்ப்பு

கூட்டணிக்கு பெரிய கட்சிகள் ஏதுமின்றி, பாமக முதலிலேயே திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிட வேண்டும், அல்லது, திமுகவுடனோ, அதிமுகவுடனோ சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

அது சரிபடாது

அது சரிபடாது

திராவிட எதிர்ப்பு பிரச்சாரத்தை பெரிய அளவில் செய்துவிட்டு திமுக அல்லது, அதிமுகவோடு கூட்டணி வைப்பது, இருக்கும் வாக்குகளையும் பதம் பார்த்துவிடும்; பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பது ராமதாசுக்கும் தெரியும் என்பதால் அதுபோன்ற கூட்டணிக்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.

தனித்த போட்டி தான்..

தனித்த போட்டி தான்..

பாமக தனித்து போட்டியிட்டால், ஒரு சில தொகுதிகளை தவிர்த்து, வெற்றி பெறுவது கஷ்டம் என்பது அவர்களின் கடந்த கால வாக்கு சதவீதம் சொல்லும் பாடம். அப்படியெல்லாம் இல்லை. பாமக தனித்து போட்டியிட்டால், இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் பாமகவையே தேர்ந்தெடுப்பார்கள் என்று அக்கட்சியினர் வாதிடலாம்.

ஏகப்பட்ட சிக்கல்

ஏகப்பட்ட சிக்கல்

ஆனால், மக்கள் நல கூட்டணி அந்த நடுநிலை வாக்குகளை கவரும் வாய்ப்பு உள்ளதால், பாமக வாக்குகள் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம் என்பதை அக்கட்சி தலைவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இதுபோன்ற இடியாப்ப சிக்கல்களால், தானே பஸ்ஸை தவறவிட்டுவிட்டுத் தவிக்கும் பயணியின் நிலைமையில் பாமக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+