திருட்டு போன எம்.எல்.ஏவின் வேஷ்டிகள் – மீட்டுத் தந்த போலீசார்
சென்னை: சென்னையில் எம்.எல்.ஏவின் வேட்டி, சட்டைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு, பின்பு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சே.கு.தமிழரசன் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக நேற்று மதியம் சென்றார்.
அப்போது அவரது காரை ஓட்டலின் வெளியே நிறுத்தி இருந்தார். அப்போது அவரது காரில் இருந்த ஒரு பையை மர்ம ஆசாமி ஒருவர் திருடிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அனாதையாக ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று அந்த பையை ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் சே.கு.தமிழரசனின் "விசிட்டிங் கார்டு" இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை தொடர்பு கொண்டு பையை பற்றி தகவல் அளித்தனர்.
அதற்கு மறுமுனையில் பதிலளித்த சே.கு.தமிழரசன், ‘‘அந்த பையில் தன்னுடைய வேட்டி, சட்டைகள் மட்டும் இருந்தன. அதில் பணம் ஏதும் இல்லை'' என்றார். மேலும் இதுகுறித்து புகார் கொடுக்கும் விருப்பமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பையிலிருந்த மற்ற ஆவணங்களுடன், சே.கு.தமிழரசனிடம் போலீசார் அந்தப்பையினை ஒப்படைத்தனர். எம்.எல்.ஏ.வின் வேட்டி, சட்டைகள் காணாமல் போனது குறித்து போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications