95 வயது "மம்மி"யுடன் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்த 72 வயது தாத்தா.. அதுவும் 13 வருடமாக.. உறைந்த போலீஸ்
வர்சா: போலந்து நாட்டில் இறந்துபோன தனது தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.
மனிதன் நாகரிகமடைய தொடங்கியதன் முதன் வெளிப்பாடு, விரிவான முறையில் உடல்களை புதைத்தல்தான். ஆனால் சமீப காலங்களாக குறிப்பிட்ட சில மனிதர்களின் செயல்பாடுகள், நாம் நாகரிக சமூகத்திலிருந்து பின்னோக்கி செல்கின்றோமா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்த எழுவதற்கான முக்கிய காரணம் போலந்தில் நடைபெற்றுள்ள சம்பவம்தான். அதாவது போலந்தின் ராட்லின் பகுதியில் உள்ள முதியவர் தனது வீட்டை விற்பதற்காக சிலரை அணுகியுள்ளார்.
அவர்கள் வீட்டின் புகைப்படம் இருந்தால் அதனை விற்பது எளிது என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் வீட்டை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டை விற்பதில் ஏகப்பட்ட பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. பின்னர் வேறு வழியின்றி ஆன்லைனில் வீடு விற்பனை செய்பவர்கள் முதியவரின் வீட்டை போட்டோ எடுத்துள்ளனர். ஆனால் வீட்டில் கடுமையான வாடை அடித்திருக்கிறது. பின்னர் போட்டோக்களை சரி பார்த்த ஆன்லைன் வீடு விற்பனை தளத்தை சேர்ந்த நபர் அதில் மம்மி போன்று ஒரு உருவத்தை பார்த்திருக்கிறார்.

மம்மி
வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்+இந்த மம்மி உருவம் என அனைத்தும் சந்தேகத்தை கிளப்பவே அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், வீட்டை ஆய்வு செய்ய தொடங்கினர். இதனை இந்த முதியவர் எதிர்பார்க்கவில்லை. எனவே காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் காவல்துறையினர் எதிர்பார்த்ததைப் போலவே அங்கு மம்மி ஒன்று இருந்திருக்கிறது. இதனை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. பின்னர் அந்த மம்மியை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரின் வீட்டில் தேடியபோது பல பொருட்கள் கிடைத்தன.

ரசாயனங்கள்
அதாவது இந்த மம்மியை பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள், வாசனை வெளியில் தெரியாமல் இருக்க மிகவும் நெடியான வாசனை திரவியங்கள் என அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு ஆன்லைன் வீடு விற்பனையாளர்களிடமிருந்து சில தகவல்கள் கிடைத்தன. தொடக்கத்தில் இதை நாங்கள் நம்பவில்லை. இருப்பினும் புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டோம். அப்போதுதான் எங்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சுமார் 100 வயது மதிக்கத்தக்க அந்த மம்மியை நாங்கள் கண்டுபிடித்தோம். ஆச்சரியம் என்னவெனில் மம்மி முழுவதும் பதப்படுத்தப்பட்டிருந்தது.

உதவி
எனவே இதற்கான கெமிக்கல்களை நாங்கள் தேடினோம். எதிர்பார்த்தபடி விலையுயர்ந்த கெமிக்கல்கள், வாசனை திரவியங்கள் என அனைத்தும் அந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு சந்தேகத்தை கிளப்பிய மற்றொரு விஷயம் என்னவெனில் இதை 72 வயதான இந்த முதியவர்தான் தனியாக செய்திருக்கிறார். இதெப்படி சாத்தியமாகும்? இரண்டாவது விஷயம், இந்த பிணம் யாருடையது என்பதுதான். விசாரணையில் முதியவர் இதனை சொல்லவில்லை. எனவே நாங்கள் இவரின் தாய் புதைக்கப்பட்ட கல்லறையை தோண்டி பார்த்தோம். அதில் தாயின் சடலம் கிடைக்கவில்லை. எனவே சடலம் முதியவரின் தாயினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

மனநல சிகிச்சை
தற்போது முதியவர் எங்கள் பாதுகாப்பில் இருக்கிறார். அவரை ஒரு சிறந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக சேர்க்க சொல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே முதியவர் மனநல சிகிச்சைக்காக விரைவில் சேர்க்கப்படுவார். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதேபோல இவருக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications