ஒரே பைக்கில் 3 பேர் சவாரி.. வாயைத் திறந்தா "டாஸ்மாக்".. தட்டிக் கேட்ட போலீஸுக்கு அடி உதை!
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் 3 பேர் சவாரி செய்தனர். இதைத் தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்ட போலீஸ்காரரை 3 பேரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்துக் காவலர் முகம்மது இஸ்மாயில் என்பவர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் திருவொற்றியூரிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை இஸ்மாயில் தடுத்து நிறுத்தினார். 3 பேரும் நல்ல போதையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து வண்டியை மேலும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார் இஸ்மாயில். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் இஸ்மாயிலிடம் சண்டையில் இறங்கினர். மேலும் யாருக்கோ போனிலும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் அ்ங்கு வந்தனர். அவரக்ள் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கி விட்டுத் தப்பி விட்டனர்.
இதுகுறித்து இஸ்மாயில் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ் (24), தமீம் அன்சாரி (22) ஆகியோரை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர். மேலும் 6 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
