“இது இந்து கோயில்.. பேச உனக்கு யோக்கியதை இல்லை” - முஸ்லிம் செய்தியாளரிடம் அத்துமீறிய பொன்.மாணிக்கவேல்
மயிலாடுதுறை: இந்து கோயிலுக்கு வர உனக்கு யோக்கியதை இல்லை என இஸ்லாமிய பத்திரிகையாளரிடம் முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பழமையான சட்டநாதர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் பணிக்காக குழி தோண்டிய போது ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு அதனை தற்போது கோயில் உள்ளே தனி அறை அமைத்து வைத்து பூட்டி சீல் வைத்து காவல்துறை பாதுகாப்பில் வைத்து இருக்கிறது.

அந்த ஐம்பொன் சிலைகளை அரசு கருவூலத்திற்கு எடுத்து செல்லவே கூடாது. அந்த சிலைகள் கோயிலுக்கு சொந்தமானவையாகும். தமிழ்நாடு அரசு அதை எடுக்க முயன்றால் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். அரசின் கணக்கு பிள்ளையாக மாவட்ட ஆட்சியர் செயல்படாமல் மக்களுக்காக செயல்பட வேண்டும். குசும்பான சில மாவட்டர்கள் ஆட்சியர்கள் உள்ளார்கள். மக்கள் அவர்களை சும்மா விடாமல் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
கோயிலுக்கு இந்த சிலைகளை திருப்பி அளிப்பதால் தேர்தலில் உங்களுக்கு வாக்கு குறைந்துவிடுமா? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தற்போது படி படியாக செய்வதாக கூறுவது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் செயலாகும். இது என்ன டாஸ்மாக்கா? இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருவதால் மூன்றாவது கட்சிக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும். கோயிலுக்கு நான் வர மாட்டேன். ஆனால், ஆட்சி செய்வேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
நான் கோயிலுக்குள்ள வர மாட்டேன் என தேர்தல் வரும் முன்பே சொல்ல வேண்டும். என் ஆள் வருவார், என் மனைவி வருவார் என்பது எனக்கு தெரியாது என தேர்தலுக்கு முன் சொன்னால் அது நேர்மை. ஆனால், தேர்தல் முடிந்து இப்படி பேசினால் நான் ஏமாற மாட்டேன். ஆங்கிலேய ஆட்சியர்கள் மக்களை கண்டு பயந்தனர். ஆனால் சுதந்திரம் அடைந்த பின் உள்ள ஆட்சியர்களை கண்டு நாம் பயப்பட வேண்டியுள்ளது. எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்." என்றார்.
நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்த பொன்.மாணிக்கவேலிடம் செய்தியாளர் ஒருவர் சுருக்கமாக பேசுமாறு கூறினார். இதனால் ஆவேசமான பொன் மாணிக்கவேல், "அதை நான் கடைசியில் சொல்வேன். உங்களுடைய தாத்தா பெயர் என்ன?" என்று கேட்க, அபூபக்கர் என செய்தியாளர் பதிலளித்தார். தாத்தாவின் தாத்தா பெயர் என்ன என்று கேட்டதற்கு தமீம் என்றார். உடனே அவரது தாத்தா பெயர் என்ன என்று கேட்டபோது முஜிபுர் ரஹ்மான் என செய்தியாளர் பதிலளித்தார்.
உடனே சுற்றி நின்றவர்களிடம் பொய் சொல்கிறார் என பொன்.மாணிக்கவேல் கூறினார். செய்தியாளர் பொய்யெல்லாம் சொல்லவில்லை. ஆவணம் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே பொன் மாணிக்கவேல், "எந்த ரெக்கார்டையும் காட்டவேண்டாம். நீங்கள் சொல்வது பொய் என்றார். உங்களை பொறுத்தவரை இந்த கோயிலை பற்றி விசாரிக்க யோக்கிதை இல்லை. இது இந்து கோயில்." என்று மிரட்டும் தொனியில் பேசினார். இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் பொன்.மாணிக்கவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications