அறிவிக்கப்படாத ”சண்டே பவர் கட்”- லீவு நாளில் வீட்டிற்குள் வியர்வையில் தவித்த திண்டுக்கல் மக்கள்
திண்டுக்கல்: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அங்கங்கு தலைதூக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டு மதியம் 3 மணிக்கே சரியானது. நேற்று விடுமுறை என்பதால், பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தனர்.

இந்நிலையில் ஏற்பட்ட இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் குடிசை மின்சார நேரமும் குறைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதே போன்று சென்னை புறநகர் மற்றும் தமிழகத்தின் மற்ற சில பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மில்கள், தொழிற்சாலைகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்றும், அந்த நேரங்களில் ஜெனரேட்டரை பயன்படுத்த மின்வாரிய அதிகாரிகள் கூறுவதாகவும் மில்கள், தொழிற்சாலைகள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வு நேரம் என்பதால் மாணவர்களுக்கும் மின்வெட்டால் சிரமம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
