தேமுதிக கொ.ப.செ.வாக பிரேமலதாவை நியமிக்க விஜயகாந்த் 'பக்கா ப்ளான்'
சென்னை: தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலராக மனைவி பிரேமலதாவை நியமிக்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போதிருந்தே தேமுதிக நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியைவிட்டு தப்பி ஓடுகின்றனர். இவர்கள் அனைவரும் முன்வைக்கும் ஒரே குற்றச்சாட்டு தேர்தல் தோல்விக்கு பிரேமலதாதான் காரணம்; அவரது யோசனைப்படி மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது மாபெரும் தவறு என்பதுமட்டுமே.
இதனால் கட்சி நடவடிக்கையில் இனி பிரேமலதா ஈடுபடமாட்டார் என்று விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் பிரேமலதாவோ, தம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை தேமுதிகவுக்காக பாடுபடுவேன் என கூறி வருகிறார்.

பிரேமலதாவுக்கு ஆதரவாக தீர்மானம்
இதனிடையே திடீரென கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட தேமுதிக கூட்டங்களில் பிரேமலதாவை கொள்கை பரப்புச் செயலராக்க வேண்டும் என விஜயகாந்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலராக சந்திரகுமார் இருந்து வந்தார். அவர் விஜயகாந்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி மதேமுதிகவை தொடங்கி பின்னர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

விஜயகாந்த் ப்ளான்
தற்போது கொள்கை பரப்பு செயலராக பிரேமலதாவை நியமிக்க வேண்டும் என்று சில மாவட்டங்களில் திடீரென தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் பின்னணியில் இருப்பதே விஜயகாந்த் தான் என கூறப்படுகிறது. அதாவது தாம் தன்னிச்சையாக பிரேமலதாவை அப்பதவிக்கு நியமிக்கவில்லை... இத்தனை மாவட்டங்கள் கேட்டுக் கொண்டதாலேயே ஒப்புதல் கேட்கிறேன் என நாசூக்காக கேட்டு பின்னர் நியமித்துவிடலாம் என்பதுதான் விஜயகாந்த் ப்ளானாம்..

எதிர்ப்பு இருக்காதுல்ல...
இதற்கு முன்னோட்டமாக மாவட்டங்களில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புங்கள் என உத்தரவும் பிறப்பித்திருக்கிறாராம் விஜயகாந்த். இப்படி செய்துவிட்டால் பிரேமலதாவுக்கு கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதும் விஜயகாந்தின் திட்டமாம்.

பலப்படுத்தவாம்...
இப்படி விஜயகாந்த் முடிவெடுக்க 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன. கட்சியில் நிலவும் பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரேமலதாவிற்கு முக்கியமான பதவி கொடுத்தாக வேண்டுமாம்; உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தேமுதிகவை மேலும் பலவீனப்படுத்தவிடாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்கின்றன தேமுதிக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications