"பிரேமலதா விஜயகாந்த் எனும் நான்.."! குஷியில் தேமுதிக! விருத்தாசலத்தில் பால் காய்ச்ச போறாங்களாம்!
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தங்கியிருக்க வீடு பார்க்க சொல்லியுள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அது போல் மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளர் சுந்தர் சி.யும் அந்த தொகுதியிலேயே குடியேற போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் எங்கிருந்தாலும் எந்த தொகுதியிலும் போட்டியிடலாம்.

ஆனால் அந்த தொகுதியில் செல்வாக்கு இருந்தால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் விஜயகாந்தை முதல் முறையாக சட்டசபை உறுப்பினராக்கிய விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
அவர் குடியாத்தத்தில் பிறந்து வளர்ந்து தற்போது சென்னையில் வசித்து வந்தாலும், தனது கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அங்கு களம் காண்கிறார். அந்த களத்தை பொருத்தவரையில் அவருக்கு சாதகமான நிலையே இருந்து வருகிறது.
அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பாமகவை சேர்ந்தவர். என்னதான் அந்த தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகமாக இருந்தாலும் தற்போது பாமக பிரிந்திருப்பதால் அவர்கள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கே ஓட்டளிக்க விரும்புகிறார்கள்.
ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள அன்புமணி பாமகவுக்கு விருத்தாசலம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு அதிமுக வேட்பாளர் நேரடி போட்டி இல்லை. அது போல் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
விருத்தாசலத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி மாறி மாறி வென்றுள்ளது. பாமக ஒரு முறையும் தேமுதிக 2 முறையும் வென்றுள்ளது. விருத்தாசலத்தை நிறைய முறை வென்ற காங்கிரஸும், தேமுதிகவும் திமுக கூட்டணியில் இருக்கின்றன. எனவே கூட்டணி ரீதியாகவும் பிரபலம் என்ற ரீதியாகவும் கள நிலவரத்தின் அடிப்படையிலும் பிரேமலதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்துள்ள நிலையில் தற்போது பிரேமலதாவுக்கு எம்எல்ஏ சீட்டும் உறுதி என்கிறார்கள். பிரேமலதா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் தேமுதிக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அது போல் விருத்தாசலத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்குவேன். விருத்தாசலத்திலேயே தங்கியிருக்க வீடு பார்க்க சொல்லியிருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அது போல் மதுரை மத்தியில் போட்டியிடும் குஷ்புவின் கணவர் சுந்தர் சி.யும், "வெளியூர்காரன் நம்மை வந்து கூட பார்க்க மாட்டான் என நினைக்காதீர்கள். மாதத்தில் 15 நாட்கள் இங்கேயே வசிக்க வீடு பார்க்க சொல்லியிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இப்படியான இவர்களது வாக்குறுதிகள் எந்த அளவுக்கு தேர்தல் வெற்றியில் கை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
