Vijayakanth: விஜயகாந்த்தை ஒரு கோமாளியாக பார்த்தாங்க! குளமான பிரேமலதாவின் கண்கள்!
விருத்தாசலம்: கேப்டன் விஜயகாந்தை ஒரு கோமாளியாகவே பார்த்தார்கள் என கூறிய பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார். ஹீரோவாக இருந்த அவரை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்கள் என்றும் வேதனை தெரிவித்தார்.
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிடுகிறார். தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 10 சீட் + ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்தும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரேமலதா பிரச்சாரம் செய்து வருகிறார். அது போல் தனது விருத்தாசலம் தொகுதி மக்களிடமும் உரிமையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் பல கட்சிகள் நீண்ட காலமாக பயணித்து வருகின்றன. ஆனால் புதிதாக சேர்ந்த எங்களுக்கு 10 சீட்களும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்பட்டது.
இதனால் சிலர் என் மீது விமர்சனம் செய்தனர். எங்கள் மீது எப்போதும் விமர்சிக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் மீது இல்லாத விமர்சனமா? எல்லாவற்றையும் சந்தித்துவிட்டுத்தான் கேப்டன் போயிருக்கிறார்.
அவர் உயிருடன் இருந்தவரை அத்தனை விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஹீரோவாக இருந்தவரை கோமாளியாக்கி, ஜீரோவாக்கி, நெகட்டிவ்வாக புரொஜெக்ட் செய்துவிட்டவர்கள்தான் இங்கு அதிகம்.
இதை மன வருத்தத்துடன்தான் பதிவு செய்கிறேன். ஆனால் இன்று அவர் மறைந்தபிறகு, "அவரை மாதிரி ஒருத்தரை இனி பார்க்கவே முடியாது" என அதே வாய்கள் சொல்கின்றன. எனவே விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
எங்களுக்கு அதிக சீட், விசிகவுக்கு கம்மி சீட் விமர்சனங்களை பலர் முன் வைத்தார்கள். இதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. இந்த கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் எடுத்த முடிவு இது!
இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். அண்ணன் திருமாவளவன் மிகச் சிறந்த முறையில் கண்ணியத்துடன் ஒரு பேட்டியை கொடுத்துள்ளார். நான் அவருடன் போனில் பேசும் போது கூட, மிக கண்ணியமாக பேசினார்.
"தேமுதிகவுக்கு என ஒரு பாரம்பரியம் இருக்கு! எதிர்க்கட்சியாக இருந்த ஒரு கட்சி! விஜயகாந்த்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி! அதை நான் மதிக்கணும், அதனால் தேமுதிகவுக்கு 10 கொடுத்துவிட்டு, எங்களுக்கு 8 கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை என கண்ணியத்துடன் பேசியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரே ஏற்றுக் கொண்ட பிறகு, மற்றவர்கள் எல்லாம் எதற்காக வயிற்றெரிச்சல் படணும்! என எனக்கே புரியவில்லை. அவரும் கூட்டணியின் அங்கமாக இருக்கிறார். அவர் எங்கள் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அவர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்கிறேன். பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறோம். மற்றவர்கள் எதுக்கு இதை விமர்சிக்க வேண்டும் என பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் இதே பேட்டியில் ஈஷா யோகாவில் நடந்தது என்ன என்பதையும் பிரேமலதா விளக்கியிருந்தார். அவர் கூறுகையில், "அதிமுக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடைசி வரை அழைக்கவில்லை.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர்களிடம் கேட்ட போது, எடப்பாடியார் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்" என்றார்கள். ஆனால் அழைக்கவில்லை. இந்த நிலையில்தான் கோவை ஈஷா யோகா மையத்திற்கு ஆண்டுதோறும் நான் செல்வதுண்டு.
அந்த வகையில் இந்த ஆண்டும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது என்னை ஈஷா மையத்தினர் எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு அழைத்துச் சென்ற போதுதான் எனது அருகே அண்ணன் வேலுமணியும் அண்ணன் எல். முருகனும் இருந்தார்கள். எனவே எதேச்சையாக நாங்கள் பேசினோம். இதை ஊடகங்கள்தான் பெரிதுப்படுத்தி, ஈஷாவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார்கள். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications