வண்டிக்கு பெட்ரோல் போட்ட "விநாயகர்".. மயிலாடுதுறை பெட்ரோல் பங்க்கில் ரூ.50க்கு 1 லிட்டர் பரிசு
மயிலாடுதுறை: ஹெல்மெட் அணியாத பலரும், வீட்டில் கிடந்த பழைய ஹெல்மெட்களை எடுத்துக் கொண்டு அவசரமாக அணிந்து, பெட்ரோல் பங்கிற்கு வந்து சேர்ந்தனர். குறுகிய நேரத்திலேயே மயிலாடுதுறை கால்டாக்ஸ் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் வரிசையாக திரண்டனர். என்ன காரணம்? பெட்ரோல் பங்கில் என்ன நடந்தது?
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்தவகையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை நிர்ணயம்
இப்படி தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், எப்போது விலை குறையும்? எப்போது சலுகைகள் கிடைக்கும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்தபடியே உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒருசில மாவட்டங்களில் திடீர் திடீரென ஒரு ஆஃபர் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துவிடும்.. அப்படித்தான் 4 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்தது..
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் சிறப்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஒரு மணி நேரம் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சலுகையை பெற வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏராளமான வாடிக்கையாளர்கள் தலைக்கவசம் அணிந்து பெட்ரோல் பங்கிற்கு வந்து ரூ.50 பெட்ரோலை வாங்கிச் சென்றனர்.
1 மணி நேரம் சலுகை
ஒரு மணி நேரம் மட்டுமே சலுகை என அறிவிக்கப்பட்டதால், பெட்ரோல் பங்கில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பெட்ரோல் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகளையும் பெட்ரோல் பங்கின் ஊழியர்கள் வழங்கினர்.
வித்தியாசமான சலுகை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் மேற்கொண்ட இந்த நிகழ்வு, தஞ்சை மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் சம்பவம் நடந்துள்ளது.. மாவட்டத்தின் மையப்பகுதியான கால்டாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று காலை வித்தியாசமான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை அதிசயம்
மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற நோக்கில் இந்த புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் பங்கிற்கு வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.50 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. வழக்கமாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு மாறாக, பாதுகாப்பை பின்பற்றுவோரை பாராட்டி ஊக்குவிக்கும் இந்த முயற்சி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? விநாயகர் கெட்டப் போட்டுக் கொண்டு நாடக கலைஞர் ஒருவர் வந்திருந்தார்.. இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விநாயகர் கெட்டப்புடன் வாகன ஓட்டிகளை வரவேற்றார்...
பெட்ரோல் பங்க்கில் விநாயகர்
விநாயகர் பெருமானின் வாகனமான 'மூஞ்சூறு' போல, இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வாகனங்களும் அவர்களுக்குப் புனிதமானவை என்றும், அந்த வாகனத்தில் பயணிக்கும்போது உயிரைக் காக்க ஹெல்மெட் அவசியம் என்றும் கிண்டலாக பேசி, விளக்கினார்.
பிறகு சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி, ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை எளிய முறையில் விளக்கினார். இறுதியில், தகுதியான வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல் பெறும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
டூவீலர்கள் - ஹெல்மெட் டோக்கன்
இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, கால்டாக்ஸ் பகுதியில் ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த சலுகையை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இதை பற்றி சொல்லும்போது, சாலை விபத்துகளில் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்துடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்ட பயத்தால் அல்லாது, குடும்ப நலனுக்காக மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதே தங்களின் குறிக்கோள் என்றும் தெரிவித்தனர்.
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். இத்தகைய ஊக்குவிப்பு அடிப்படையிலான முயற்சிகள், சாலை பாதுகாப்பில் நீண்டகால மாற்றத்தை உருவாக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications