4 தொகுதி சட்டசபைத் தேர்தலில் ம.ந.கூ போட்டியிடாது - திருமாவளவன்
சென்னை: நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டசபைத் தொகுதிகளுக்காக தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த கடும் புகாரையடுத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு தேர்தல் முடிவுகள் வெளியான பின் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதனையடுத்து மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் . திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணி சார்பாக இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம் என்று கூறிய திருமாவளவன், தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை சில தினங்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இதேபோல மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை நான்கு கட்சித்தலைவர்களும் ஆலோசித்து அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
