காலையிலேயே கொந்தளித்த பயணிகள்.. மதுராந்தகத்தில் ரயில் மறியல் - பரபரப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இன்று காலையில் திடீரென்று பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஆண்டுதோறும் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விரைவாக சென்று வர வசதியாக மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் என்பது சென்னையில் இயங்கி வரும் நிலையில் மின்சார ரயில்கள் சென்னை அருகே உள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இதனால் மின்சார ரயில் என்பது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் மக்கள் மின்சார ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தான் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இன்று திடீரென்று பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது விழுப்புரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் என்பது தினமும் காலதாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இந்த ரயில் இன்றும் தாமதமாக வந்த நிலையில் பயணிகள் கடும் அதிருப்தியடைந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்த விழுப்புரம் - தாம்பரம் ரயில், சென்னை -மதுரை விரைவு ரயில் ஆகியவற்றை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கினர். ஆனால் பயணிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications