தமிழக கடலோரங்களில் விடிய விடிய மழை... சுவர் இடி்ந்து 7 பேர் பலி
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியானார்கள்.
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை சின்னப்பயூர் கிராமத்தில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல வெளிமாநில ஊழியர்கள் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். பெரும்பாலான ஊழியர்களுக்கு கம்பெனியின் 12 அடி உயர மதில் சுவரை ஒட்டிய தங்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்தமதில் சுவரில் ஒரு பகுதி அடியோடு சாய்ந்து அந்த வீடுகள் மீது விழுந்தது. சம்பவ இடத்தில் இருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டன. காயம் அடைந்துள்ளவர்கள் பொன்னேரி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வேலூர் அருகே கன மழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் சாமுண்டீஸ்வரி என்ற 46 வயது பெண் இறந்தார். இடிந்த சுவருக்குள் சிக்கியிருந்த பாஸ்கர், பிரபு, பிரசன்னா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, நாகப்பட்டிணத்திற்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி நகர்ந்து 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்கு கரை கடந்தது. நாகைக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் காற்றழுந்த தாழ்வு நிலை உள்ளது.
தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வட மாவட்டங்களிலும், சென்னையிலும் ஒர சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. காலையில்தான் சற்று ஓய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications