விடாது பெய்த மழையால்.. வழக்கம் போல நீரில் மூழ்கிய சென்னை
சென்னை: சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் காலை வரை பெய்த மழையால் வழக்கம் போல நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
புறநகர்ப் பகுதிகள் பெரும் ஸ்தம்பிப்பை சந்தித்துள்ளன. பல வீடுகளில் நீர் புகுந்துள்ளது. அதேசயம், குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மக்களுக்கு நிம்மதிதான்.

நள்ளிரவுக்கு மேல் சென்னையில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதிகாலையில் இது வேகம் பிடித்து வெளுத்து வாங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.
திருவல்லிக்கேணியில் அசுதின்கான் தெருவில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் அப்பகுதியில் சுமார் 80 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவல்லிக்கேணி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
அண்ணா சாலையையொட்டி, சத்தியமூர்த்தி பவன் இருக்கும் ஜெனரல் பீட்டர் சாலையில் மழை தண்ணீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அண்ணா சாலையில் இருந்து பார்க்கும் போது அந்த ரோடு குளம் போல காட்சி அளிக்கிறது. இன்று காலையில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. பின்னர், கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் வீசிய பலத்த காற்றால் 4 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சைதாப்பேட்டை 4வது மெயின் சாலையில் சாய்ந்த மரத்தை, மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அம்பத்தூர் எம்.டி.எச் சாலையில் ராமசாமி மேல்நிலைப்பள்ளி அருகிலும், தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி.கல்லூரி அருகில் கே.பி.தாசன் சாலையிலும் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
புரசைவாக்கம் டாணா தெருவையொட்டிள்ள ரெங்கையா தெருவிலும் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
விடிய விடிய பெய்த மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியது. நேரம் ஆக ஆக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு மழை நீர்வரத்து இல்லை. கிருஷ்ணா தண்ணீர் மட்டும் 100 கன அடி வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியில் தண்ணீன் இருப்பு குறைந்தது.
தற்போது மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் மழைநீர் 513 கன அடி, கிருஷ்ணா தண்ணீர் 112 கன அடி பூண்டி ஏரியில் நீர் இருப்பு 376 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் நீர் இருப்பு 1520 மில்லியன் கன அடி. செம்பரம் பாக்கம் ஏரியில் 816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக தற்போது ஏரிக்கு 1240 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரியில் 163 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 23 கன அடி தண்ணீர் வருகிறது. மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. எனவே நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு மழைக்காலத்தில் இப்போதுதான் சென்னையில் பெரும் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications