சென்னையை மீண்டும் மிரட்டும் மழை... சொன்னமாதிரி நாளைக்கு கொட்டுமோ? பீதியில் மக்கள்
சென்னை: சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. சாரலும், தூறலுமாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் உருவாகியுள்ளது. வட மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. சென்னையில் நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்த நிலையில் புறநகர் பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் மழை மிரட்டத் தொடங்கியுள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு 48 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பஞ்சாங்கத்தில் சொன்னது போல 22ம் தேதி மழை கொட்டுமோ என்று சென்னைவாசிகளிடையே பீதி எழுந்துள்ளது.

விடிய விடிய மழை
சென்னையில் நேற்றிரவும் கன மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புறநகரில் மழை
திருவள்ளூர், பொன்னேரி பகுதிகளிலும் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, தென்சென்னையில் பகுதிகளான வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனிடையே மழை இன்னும் 48 மணிநேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரி நீர் திறப்பு
செம்பரபாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சைதாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் 600 குடிசைகள் மூழ்கியுள்ளன. சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோர்ட்டூா்புரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சைதாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தாமஸ்நகர், எம்.ஜி.ஆர். தெரு, அருளப்பா நகர், ஆரோக்கியமாதா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து சுமார் 600 குடிசைகள் மூழ்கியுள்ளன.

வாட்ஸ் அப் அறிவிப்புகள்
தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிவாரணப் பணிகள், விடுமுறை அறிவிப்பு என்று பல தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.குறிப்பாக, சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் அவரவர் பகுதி நிலவரங்களும், வானிலை குறித்த முன்னறிவிப்புகளும் பகிரப்படுகிறது. சிலரோ பீதி ஏற்படும் வகையில் வானிலை குறித்த தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

சரியான தகவலை தெரிந்து கொள்ள
வானிலை முன்னறிவிப்பு குறித்த நம்பகமான தகவல்களைhttp://www.imd.gov.in/ என்ற வலைதளம் தமிழகத்தில் அன்றைய தினத்தின் வானிலை முன்னறிவிப்பை http://www.imdchennai.gov.in/Tamil_local.htm என்ற அதிகாரபூர்வ சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளப் பக்கத்தில் காணலாம்.

வானிலை அறிவிப்பு தகவல்
சென்னை வானிலை முன்னறிவிப்பை http://www.imdchennai.gov.in/Tamil_local.htm என்ற பக்கத்தில் காணலாம். இவை இரண்டிலும் நாள்தோறும் தமிழிலேயே அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவற்றை தெரிந்து கொண்டு சரியான தகவலை மட்டுமே பகிரவேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவோ பார்த்துட்டோம்
சென்னைவாசிகளும், புறநகர்வாசிகளும் எவ்வளவோ மழை வெள்ளத்தை பார்த்துவிட்டார்கள்... இனி எவ்வளோ மழை வந்தாலும் தாங்குவார்கள் என்கின்றனர் ஆளுங்கட்சியினர். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளதாக சொல்கிறது அரசு. வழக்கம்போல எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாக உள்ளது. எப்படியாகப்போகுதோ நாளைக்கு தெரியும்.












Click it and Unblock the Notifications